tamil sirukathai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil sirukathai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

திங்கள், 7 நவம்பர், 2011

சிக்கிலிங்கிராமம்

திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கணேசனுக்கு விழிப்பு வந்தது. ரயில் நின்ற கையோடு, கடகடவென்று அத்தனைபேரும் இறங்கிப்போய்விட, கம்பார்ட்மெண்ட்டில் அவர்மட்டுமே இருந்தார். கையில் சுருட்டிவைத்திருந்த மஞ்சள் பையைக் கீழே வைத்துவிட்டுத் தலையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டார். முன்னெல்லாம்,வாரநாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைபார்த்துவிட்டு, வார இறுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம், வீட்டுக்குப்போகிற ஆசையும் அம்மா கையால் சாப்பிடுகிற ஆவலுமாய் ரயில் நின்ற கையோடு வேகவேகமா இறங்கி நடப்பார் அவர். இப்போது ஊரில் நமக்கென்று யாரிருக்கிறார்கள் என்ற விரக்திவந்து விழிகள் நிறைந்தாலும், ஊர் நினைப்போடு நாமாவது இருக்கிறோமே என்ற எண்ணத்துடன்,மெல்ல எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்றார்.

போவோரும் வருவோருமாகப் பிளாட்பாரம் நெரிசலாக இருந்தது. காலையில் எழுந்ததும், வீட்டில் குடித்த செம்புத்தண்ணீர் வெறும்வயிற்றில் அலைய, எதையாவது கொண்டா கொண்டா என்று இரைச்சலிட்டது வயிறு. ரயில் நிலையத்தின் வாசலில் ஆட்டோவும், டாக்ஸிகளுமாகப் பாதையை மறைத்துக்கொண்டு நின்றன. பெரியவரே, எங்க போகணும்? என்றவாறு பின்னால் வந்த ஆட்டோக்காரரை, பக்கதுலதாம்ப்பா....வண்டியெல்லாம் வேணாமென்று விலக்கிவிட்டு, பக்கவாட்டுப்பாதையில் நடந்தார் கணேசன்.

சாலைக்குமாரசாமி கோயில் வாசலில் செருப்புகளைக்கழற்றிவிட்டு , ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்தார் கணேசன். சுற்றிலும் நடைபாதைக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பழைய புத்தகங்கள், பாத்திரங்களென்று விற்பனைக்கு எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். மெல்ல ரயில்வே லைன்வழியாக நடந்தார். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே சிக்கிலிங்கிராமத்து வயல்காற்று தொட்டுத் தழுவிக்கொண்டதுபோலிருந்தது அவருக்கு.

இப்போதிருக்கிற தலைமுறைப் பிள்ளைகளிடம் சிக்கிலிங்கிராமம் என்று சொன்னால் நிச்சயமாய் அவர்களுக்குத் தெரியாது. சிக்க நரசய்யன் கிராமம் என்கிற பெயரைப் பழைய தலைமுறை மக்கள் பாசமாய் சிக்கிலிங்கிராமமென்று சொல்ல, இப்போதிருக்கிற மக்கள் அதை சி.என்.வில்லேஜ் என்று நாகரீகமாய்ச் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.

வேகவேகமாய்க் கடந்துபோகிற வாகனங்களைப் பார்த்தபடி தெருவோரமாய் நடந்தார். "ஏடே,கணேசா, எப்டிப்பா இருக்கே...எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து. உடம்புக்கெல்லாம் எப்டி, சௌரியம்தான? என்றபடி நரைத்த தாடியும் மீசையுமாகக் கிட்டத்தில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை கணேசனுக்கு. "நீங்க..." என்று தயங்கியவரைப்பார்த்து, "பாத்தியா, ஆளையே தெரியல உனக்கு. அதுக்குத்தான் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து போகணும்கிறது என்றவர், மரக்கடை முத்துவேல் மகன், உன் சிநேகிதன் சோமு என்றபடி கையைப்பிடிக்க,"அடடே சோமுவா நீ? என்னய்யா, ஆளேமாறி அடையாளம்தெரியாமபோயிட்ட? என்றவாரு அவரைத் தோளுடன் சேர்த்தணைத்துக்கொண்டார் கணேசன்.

சோமுவுக்கும் கணேசனுக்கும் சிக்லிங்கிராமத்தில் பக்கத்துப்பக்கத்துவீடுதான். எட்டாவதுவரைக்கும் சாஃப்டர் ஸ்கூலில் ஒன்றாகத்தான் படித்தார்கள். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, அப்பா வைத்திருந்த மரக்கடைக்கு வேலைக்குப்போய்விட்டார் சோமு. படித்துமுடித்து பத்தொன்பதாவது வயதிலேயே பள்ளிக்கூட வாத்தியாரானார் கணேசன். சின்னவயசில் சோமுவும் கூட்டாளிகளுமாய்ச் சேர்ந்து பக்கத்துத் தோப்பில் மாம்பழம் திருடிய கதையெல்லாம் நினைவுவந்தது கணேசனுக்கு. நன்றாகக் கனிந்த மாம்பழங்களைப் பறித்து, கல்லில் வைத்து உருட்டியெடுத்து, சின்னதாய்த் துளையிட்டு, உள்ளேயிருக்கிற சாறைக்குடித்துவிட்டு, அதில் காற்றை ஊதிக் கண்ணுக்குப்படுகிறமாதிரி வைத்துவிட்டு வருவார் சோமு. தோட்டத்துக்கு வருகிற தோட்டக்கார மாரிமுத்துத் தாத்தா, அதை எடுத்துப் பார்த்து ஏமாந்துபோய், ஏழெட்டு ஊருக்குக் கேட்கிறமாதிரி அந்தப்பயபுள்ள, இந்தப்பயபுள்ள என்று அப்பாக்களையும் சேர்த்து வைதுவிட்டுப்போவார்.இப்ப நினைத்தாலும் சிரிப்புவந்தது அவருக்கு.

இப்ப அந்த இடத்தில் தோப்புமில்லை மாமரங்களுமில்லை, வரிசையாக வீடுகட்டிப் பெரிய குடியிருப்பாக்கியிருந்தார்கள். அப்புறம், எப்டியிருக்கே சோமு? உன் வீட்டம்மா சௌக்கியமா? மக்களெல்லாம் உன்னை நல்லாப் பாத்துக்கிறாங்களா? போனமுறை வந்தப்ப நீ வெளியூர்ல இருக்கிறதாச் சொன்னாகளே? என்றபடி அவரைப்பார்த்து ஆதுரமாய்க் கேட்டார் கணேசன். பதில் சொல்லாமல், கோயில் பக்கம் பார்வையை ஓட்டினார் சோமு. என் வீட்டுக்காரிக்கு உடம்புக்கு சொகமில்லாம மதுரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம் கணேசா. ரெண்டுமாசம் முன்னால அவளும் மேல போயிட்டா. சாவுக்கு வந்த புள்ளைக, பதினாறு கழிஞ்சதும் அதது வேலைமுடிச்சிருச்சுன்னு ஊருக்குப் போயிட்டாக. இப்ப நா மட்டுந்தான் இருக்கேன். குறுக்குத்துறை முருகனும், சாலைக்குமார சாமியும்தான் சதம்னு நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். நீ எப்படியிருக்கே? உன் வீட்ல எல்லாரும் சௌரியமா? ஏன் ஒத்தையா வந்துருக்கே? கூட யாரையாவது கூட்டிட்டு வரலாம்ல என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் சோமு.

அவுகவுக வேலையப் பாத்துக்கிட்டு எல்லாரும் நல்லாருக்காகடே. எனக்குத்தான் நம்ம ஊரு,சாமி, இன்னும் மக்க மனுஷங்க ஞாபகமெல்லாம் அடிக்கடி வந்துருது. அப்படி வரும்போதெல்லாம் பையன்கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் காசையும் வாங்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.நாள்முழுக்க நம்ம ஊர்த் தண்ணியையும் காத்தையும் நல்லா அனுபவிச்சிட்டு, சாயங்காலத்து ரயில்ல திரும்பிப்போயிருவேன். மாசத்துக்கொருக்கா வந்துட்டுத்தான் இருக்கேன். உன் சம்சாரம் தவறின விஷயம் தெரியாமப்போச்சுது சோமு என்று ஆறுதலாய் அவர் கையைபிடித்துக்கொண்டார் கணேசன்.

அது கிடக்குது விடு.உனக்குத்தான் மாசாமாசம் பென்சன் பணம் வருமுல்ல...அப்புறம் எதுக்கு மகன் கிட்ட கையேந்தணும்? என்றார் சோமு. அதெல்லாம் கையெழுத்துப்போட்டுக் குடுக்கிறதோட சரி சோமு. அவனாப்பாத்து செலவுக்கு ஏதாவது குடுப்பான். சிலசமயம் அதுவுங்கூட மறந்துபோயிரும் அவனுக்கு. ஆனா, என்னதான் நடந்தாலும், மாசத்துக்கொருவாட்டி வந்து நம்ம மண்ணை மிதிக்காம இருக்கிறதில்லை என்றார் கணேசன்.

சொல்லச்சொல்லக் கேக்காம, இங்க அரமனைமாதிரியிருந்த வீட்ட வித்துப்புட்ட. அதுமட்டும் இருந்திருந்தா வந்த காலோடு திரும்பாம நாலுநாள் இங்க தங்கணும்னு தோணியிருக்கும்ல என்றார் சோமு. என்ன பண்றது சோமு, உபயோகமில்லாத பழைய பொருளையெல்லாம் உடனே வித்துப் பணமாக்கிரணும்னு பாக்குதுக இந்த காலத்துப் புள்ளைங்க. என்ன செய்ய? அழுத்திக் கேட்டாக. அதான் வித்துக்குடுத்துட்டேன் என்றார் கணேசன். "ம்ம்...சொத்துசொகம் மட்டுமில்ல, சொந்தத்துலகூட பழசாகி, உபயோகமில்லாமப் போச்சுன்னா உதறத்தான் செய்யிறாங்க" என்றபடி, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சோமு.

அதைவிடு கணேசா, நம்ம கூட்டாளிகள் நாலுபேர்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம். மத்தவங்கல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க. சரிய்யா...ஒன்னப்பாத்ததுல இன்னிக்கி ரொம்ப சந்தோசம். நான், நம்ம குறுக்குத்துறைவரைக்கும் போறேன். நீயும் கூட வரியா என்றார் கணேசன். இல்ல, கணேசா...நீ போயிட்டு வா.எனக்கு அவ்வளவுதூரம் நடக்கத் தோதுப்படாது. நா இங்க கோயில் திண்ணையிலதான் உக்காந்திருப்பேன் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பி நடந்தார் கணேசன். அதற்குள், பின்னாலிருந்து கணேசா... என்று மெல்லமாய்க் கேட்டது சோமுவின் குரல். என்னய்யா, என்றபடித் திரும்பினார் கணேசன். அடுத்ததடவை நீ இங்க வரும்போது, நான் இருப்பனோ மாட்டனோ...என் வீட்டுக்காரி போனதுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட்டும் நாளாகிப்போச்சுது. இப்ப, உங்கூட சேர்ந்து ஒருபிடி சாப்பிடணும்னு தோணுது கணேசா என்று மெல்லமாய்ச் சொன்னார் சோமு. பக்கென்று தொண்டைக்குழிக்குள் அடைத்தது கணேசனுக்கு.

சிறுவயசில்,சிக்கிலிங்கிராமத்துக்கே செல்லப்பிள்ளை சோமு. எல்லார் கூடவும் நல்லாப் பேசுவான். என்ன வேலை சொன்னாலும் செய்வான். பள்ளிக்கூடத்துக்கு வரும்போது கால்சட்டைப்பைக்குள் நெல்லுப்பொரியும் அச்சுவெல்லமும் அள்ளிப் போட்டுக்கொண்டுவருவான். வழி நெடுக அவன் அள்ளியள்ளித்தர ரெண்டுபேரும் தோளில் கைபோட்டுக்கொண்டே கதைபேசிக்கொண்டு நடப்பார்கள். மரக்கடைக்கு வேலைக்குப்போனபிறகும்கூட, பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு, வாசலில் சைக்கிளில் வந்து நிற்பான். அண்ணாச்சி கடையில் வறுத்தகடலை வாங்கிக்கொடுப்பான். அம்மா செய்ததாகச்சொல்லிக் கொழுக்கட்டை கொண்டுதருவான்.பள்ளிக்கூடத்திலிருந்து, விடாமல் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டு மறுபடியும் வேலைக்குப்போவான். அவனுக்கா இந்த நிலைமை ஆறவில்லை அவருக்கு.

தோழனின் கையைப்பிடித்து மறுபடியும் சாலைக்குமாரசாமி கோயில்பக்கம் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் என்ன சாப்பிடுறே சோமு? என்றார். ரெண்டு வடையும் ஒரு தோசையும் சொல்லு கணேசா என்றார். தனக்கும் அதையே கொண்டுவரச்சொன்னார். ருசித்துச் சாப்பிட்ட சோமுவைப்பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டார் கணேசன். ஆளுக்கொரு காப்பியும் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியில் வந்ததும், கணேசா, நீ குறுக்குத்துறைக்குப் போயிட்டுவா. எனக்கு மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு. நா இங்க கோயில் திண்ணையில கொஞ்சநேரம் தூங்குறேன். திரும்பி வரும்போது கட்டாயம் என்னப் பாத்துட்டுத்தான் போகணும் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுச் சிரித்தபடி நடந்தார் கணேசன்.

குறுக்குத்துறைக்குப்போனதும், படித்துறையில் உட்கார்ந்து, கைநிறைய ஆற்று நீரை அள்ளிக்குடித்தார். சட்டை நனைந்து நெஞ்சு குளிர்ந்தது அவருக்கு. முருகனைக் கும்பிட்டு, மனசிலிருந்த கவலையெல்லாம் முறையிட்டுவிட்டு, பின்பக்கத்து மண்டபத்துக்கு வந்து சரிந்து உட்கார்ந்தார். சின்ன வயசில் அம்மாவுடன் ஆற்றில் குளிக்கவரும்போது,குளித்தபின் அங்கே நின்றுதான் அம்மா உடைமாற்றிக்கொள்ளுவாள். அம்மா உடுப்புமாற்றுகிற வரைக்கும், ஆற்றில் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருப்பார் கணேசன். பைக்குள்ளிருந்து துண்டை எடுத்து விரித்துக்கொண்டு கால்களை நீட்டிப்படுத்தார். அம்மா மடியில் படுத்துக்கொண்ட அதே சுகம் தெரியக் கண்களை மூடிக்கொண்டார். சற்றுநேரம் உறங்கி எழுந்திருக்க, உடம்பும் மனசும் இலேசானதுபோலிருந்தது அவருக்கு. ரயிலுக்கு நேரமாகிவிட்டிருந்தது. சோமுவைப் போய்ப்பார்க்க நேரமில்ல. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நடந்தார். இரவு எட்டரைக்கெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டார்.

மறுநாள், காலையில், வீட்டுத்திண்ணையில் சாய்வுநாற்காலியில் கண்ணைமூடிப் படுத்திருந்தார் கணேசன். தொலைபேசி மணியடித்தது. எடுத்துப்பேசிய அவருடைய மகன் சரவணன்,"அப்பா, சிக்கிலிங்கிராமத்தில, உங்க சினேகிதர் சோமுங்கிறவர் நேத்து இறந்துபோய்ட்டாராம்" என்று சொல்ல, "குடுத்துவச்சவன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டார் கணேசன்.


புதன், 15 ஜூன், 2011

சொல்லும் கொல்லும்!

படம்: "இணையத்திலிருந்து"


மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.

"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.

அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து  சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும்  பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.

சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.

பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.

மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.  "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.

"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,  வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.

"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.

அதற்குள்,  "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.

என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை  பரமசிவம்.

 அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.

சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.

ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.

சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.

நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு  'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.

ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை  ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.

அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்  பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.