ஞாயிறு, 24 அக்டோபர், 2010
இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...
கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...
போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...
கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.
இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.
*******************
நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...
'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.
என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...
*******************
அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...
சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.
பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.
******************
சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...
அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.
உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.
*********************
என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...
சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.
ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.
*******************
தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.
பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.
கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.
*********************
ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...
என்னது?? தங்கமா....???
உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????
*********************
சனி, 23 அக்டோபர், 2010
அசைகிற சொத்தும் அசையாத சொத்தும்!
அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும், ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அது போக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...
அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு. களையெடுத்து, நாத்து நட்டு, கிடுகு முடைஞ்சு, கூடைபின்னி, வேப்பமுத்துப் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது
சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப, சேத்துவச்ச காசில பெருசா ஒரு டொகை இருக்கும் என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.
ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும், அப்பப்ப ஆட்டை வித்தும், விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.
நம்ம செம்மறி ஆட்டையும், ரெண்டு குட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே, என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு பேசி முடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவு பண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம்.
ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு ஆட்டையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா, இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம்.
ஏதோ, அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான் போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து, ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப் பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல...
யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து, மாட்டையும் ஆட்டையும் விலை பேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க.
இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி, வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு
அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொன்னான் குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிவிட்டு, அவனுடன் சேர்ந்துகொண்டான் கதிரேசன்.
கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம் ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் தனக்கு இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில், அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனாள் அன்னம்.
அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு, நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, தேவாரப் புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.
*********************
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
சாலை விபத்துகளும் சரியும் கனவுகளும்!
அம்மா, இனிமே எனக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் குடுக்கும்போது கூடகொஞ்சம் சேத்துக்குடும்மா என்றாள் என் மகள்.
சரிடா, யாருக்கு ஃபிரெண்டுக்கா? என்றேன்.
பிரெண்டுதான்...ஆனா, குட்டி ஃபிரண்ட்...நாலுவயசுதான், என்றாள்.
அதென்னடா, கே.ஜி புள்ளையா என்றேன்.
ஆமாம்மா... என்றாள்.
தினமும் காலையில போகும்போது அந்தப்பொண்ணு எங்ககூட வரும். ஸ்கூல் பஸ்ஸில் தன்னோட இடத்துல அஞ்சு நிமிஷம்கூட உக்காராது...பேரு அஜிதா. ஒவ்வொருத்தர் மடியிலயா வந்து உக்காந்துகிட்டு, ஏதாவது சொல்லிக்கிட்டு, இல்லேன்னா கேட்டுக்கிட்டு வரும். எங்க எல்லாருக்கும் அது பெட்.
ஆனா, நேத்திலேருந்து அந்தக்குழந்தைமேல எல்லாருக்கும் பாசத்தோட, பரிதாபமும் சேந்துகிடுச்சு.
நேத்து காலையில ஸ்கூலுக்கு பஸ்ஸில் வந்தப்போ, எங்க வீட்டுக்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க. ஆனா, எங்கம்மா மட்டும் அழுதுகிட்டு, ரூமைவிட்டு வெளியவே வரல,என் குட்டித்தம்பியைக்கூட தூக்கல...என்று அஜிதா கவலையாகச் சொன்னது.
பக்கத்திலிருந்த ஒரு பெண், பஸ்ஸில் வந்து, தன் காலைச் சிற்றுண்டியாக பர்கர் (burger) சாப்பிட்டதைப் பாத்துட்டு, எங்கப்பாவும் எங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப்போகும்போது, பர்கர் ஐஸ்க்ரீமெல்லாம் வாங்கிக்குடுப்பாங்க ஆனா, இனிமே எங்கப்பா எங்களைக் கடைக்கெல்லாம் கூட்டிப்போகமுடியாது...அப்பா, வெளிநாட்டுக்குப் போயிட்டாங்களாம். இனிமே, நான் வளந்து, படிச்சு, கல்யாணம் பண்ணும்போதுதான் திரும்பி வருவாங்களாம்...எங்க வீட்டுக்கு வந்திருக்கிற கிராண்ட்மா (grand mother)சொன்னாங்க என்று அஜிதா சொன்னப்ப எங்க யாருக்கும் எதுவும் புரியல.
ஆனா, மத்தியானம் கே ஜி ஸ்டூடண்ட்ஸையெல்லாம் பன்னிரண்டுமணிக்குக் கொண்டுவிட்டுட்டு, அடுத்து எங்களைக் கூட்டிட்டுவரும்போதுதான் பஸ் கண்டக்டர் சொன்னார், அஜிதாவோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அஜிதாவுக்கு விபரம் தெரியவேண்டாம்னுட்டு, அதை வீட்ல வச்சுக்காம ஸ்கூலுக்கு அனுப்பிட்டிருக்காங்க என்று.
கேட்டதும் எனக்கு தொண்டைக்குள்ள வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சும்மா...ஒருத்தரையொருத்தர் பாத்து வந்த கண்ணீரை அடக்கிக்கிட்டோம். இன்னிக்கும் அஜிதா ஸ்கூலுக்கு வரும். ஒவ்வொருத்தர் மடியிலயும் வந்து உக்காந்து அவங்க வீட்டுக்கதையைச் சொல்லும். நினைக்கவே கஷ்டமா இருக்கும்மா என்று சொல்லிவிட்டு, பஸ் வரவும் கிளம்பினாள் என் மகள்.
அவளைக் கையசைத்து வழியனுப்பமுடியாமல் செயலற்றுப்போய் நின்றேன் நான்.
பி.கு:-சாலையில் பாதுகாப்பு, நம் சகலருக்கும் உயிர் காப்பு!
********
திங்கள், 11 அக்டோபர், 2010
மருமக வந்த நேரம்!
காலைலேருந்தே தூறல் விழுந்துகிட்டுதான் இருக்கு...வங்காள விரிகுடாவுல புயல் வந்துருக்காம். இன்னும் நாலுநாளைக்கு மழை இருக்கும்னு சொல்றாக... என்று மதினிக்காரியிடம் சொன்னபடி, ரேடியோவைப் போடப்போனா செவந்தி.
கரண்டு இல்லாம இருந்தது தெரியவர, போச்சா...எலக்ட்ரி லைட்ட நம்பி எல போடாதன்னு சும்மாவா சொன்னாக...உரக்க நாலுதூறல் விழுந்தாப்போதும், உடனே கரண்டை நிப்பாட்டிருவானுங்களே,வேலையத்தபசங்க...என்று வைதபடி வெளியே போனா செவந்தி.
எதிரே, பேச்சியக்கா வீட்டுல போட்டிருந்த கல்யாணப் பந்தலில் ஆட்டுக்குட்டிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. வெளியூர்ல கல்யாணம் முடிஞ்சி, விளக்குவச்சதும் பொண்ணும் மாப்பிள்ளையும் வருவாகன்னு ராசாத்தி சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு.
சாயங்காலத்துக்குள்ள நாலுநேரம் வந்துவந்து போயிட்டுது கரண்டு. திரும்ப வந்ததும், குறை கரண்டாயிருக்க, எதுக்கும் தேவைன்னு, சிம்னி விளக்கத் தொடச்சு மண்ணெண்ணெய் ஊத்தி,எடுத்து வச்சா செவந்தி.
அதுக்குள்ள, செவந்தியக்கா, பேச்சியக்கா வீட்டு மாப்பிள்ளையும் பொண்ணும் தெருமுக்குல வந்துட்டாகளாம்...என்று குரல் கொடுத்தபடி, வேடிக்கைபாக்க ஓடிப்போனா லெச்சுமி. விடாம, தூறல் விழுந்துகிட்டேயிருக்க, அக்கம்பக்கத்துக்காரவுகல்லாம் அவுகவுக வீட்டுவாசல் கிட்டயே நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாக.
நாலுவீடுதள்ளிக் காரு வரும்போது, மறுபடியும் பட்டுன்னு போயிட்டுது கரண்டு. மணமகளே மருமகளேன்னு பாட ஆரம்பிச்சு, விக்கிக்கிட்டு நின்னுபோச்சு பாட்டு. "அடி ஆத்தி, பேச்சியம்மா வீட்டுக்கு மருமக வாரநேரம், பூரா ஊரும்ல இருட்டாப் போச்சுது... என்று, நீட்டி முழக்கியது நல்லம்மாக் கிழவி.
அட, ஆமால்ல... என்று உச்சுக்கொட்டியபடி ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டாங்க அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க. அதுவரைக்கும், பளிச்சுன்னு இருந்த பேச்சியக்கா முகமும், தீஞ்சுபோன பல்பாட்டம் ஓஞ்சு போக, உள்ள வரும்போதே நல்ல யோகத்தோடதான் வந்திருக்க.... என்று, வந்த மருமக கிட்ட வாசப்படியிலயே எரிஞ்சு விழுந்தா பேச்சியக்கா.
**********
சனி, 9 அக்டோபர், 2010
நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!
நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!
நவராத்திரி விரத காலம் பயறு வகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில் பலவகை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட காலத்தில் உடம்புக்கு அதிகமான நோய்எதிர்ப்பு சக்தி தேவை. அதற்காகத்தான் நவராத்திரி காலத்தில் நிறைய பயறுவகைத் தானியங்களை உண்ணும் வழக்கம் வந்ததுன்னு சொல்லுவாங்க.
* பயறுவகைகள் எல்லாமே அதிகமான புரதச் சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
* பயறு வகைகளில் நார்ச்சத்து, அதிகமென்பதால் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
* தினமும் ஒரு கப் வேகவைத்த ஏதாவதொரு பயறை உணவில் சேர்த்துக்கொண்டால் அன்றாடத் தேவையில் 63% நார்ச்சத்து அதிலிருந்து நமக்குக் கிடைத்துவிடுகிறது.
* இது தவிர, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் இவற்றிலுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இவை அதிகம் உதவுகிறது.
எல்லாம் சரி, அதென்ன நரிப்பயிறுன்னுதானே யோசிக்கிறீங்க?
நேத்து யாராவது சொல்லியிருந்தா நானும் இதேமாதிரிதான் யோசிச்சிருப்பேன். ஏன்னா, இந்தப் பயறோட தமிழ்ப்பெயர் இப்பத்தான் எனக்கும் தெரிஞ்சிது. ஆங்கிலத்தில் இதுக்குப்பேரு Black Eye Beans. தமிழ்ல நரிப்பயறு...ஏன் இந்தப் பெயரை வச்சாங்கன்னு எனக்குத் தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிட்டுப்போங்க.
நரிப்பயறு - 1/2 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சிறிய கத்தரிக்காய் - 2
தேங்காய்த்துருவல் - 1 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சையளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு -தேவைக்கு
தாளிக்க...
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை...
பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வச்சுக்கங்க.
காய்கறிகளை நறுக்கி வச்சுக்கங்க.
புளியைக் கரைச்சு வடிகட்டி வச்சுக்கங்க.
தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைச்சு வச்சுக்கங்க.
செய்முறை:-
அடுப்பில் வாணலியை வச்சு, தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கணும்.
தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிச்சு,அதில் வெங்காயம் பச்சை மிளகாயப் போட்டு வதக்கணும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், அப்புறம் தக்காளியையும் போட்டு வதக்கணும்.
தக்காளி கரைஞ்சு வரும்போது புளிக் கரைசலை ஊத்தி, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.
கலவை,ரெண்டு நிமிஷம் கொதிக்கவிட்டு, அரைச்ச தேங்காய் சீரக விழுதைச் சேர்க்கவும்.
வேகவைத்த பயறைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போடவும்.
குழம்பை மூடி, எண்ணெய் பிரியும்வரை சிறுதீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.
நரிப்பயறு புளிக்குழம்பு ரெடி.
பின் குறிப்பு :- பயறு சாப்பிட்டு வரும் பின் விளைவுகளுக்கு வெள்ளைப்பூண்டு அக்கா, அல்லது பெருங்காயப் பாட்டியின் உதவியை நாடலாம்.
செவ்வாய், 5 அக்டோபர், 2010
எங்களுக்கு விவாகரத்து வேண்டும்!
ஊரிலிருந்து அந்த அப்பா, அமெரிக்காவிலிருக்கும் தம் மகனை அழைத்துச் சொன்னார்,
" உன்னுடைய இந்த நாளை வீணடிப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன் மகனே... ஆனால், இதற்கு மேலும் இதைச் சொல்லாமல் நாளைக் கடத்தமுடியாது. 35 வருஷ கல்யாண வாழ்க்கையில்,இதுவரை பட்ட கஷ்டமெல்லாம்போதும். நான் உன் அம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன் " என்று.
அப்பா, என்ன சொல்றீங்க நீங்க? சற்றேறக்குறைய அலறினான் மகன்.
இதற்குமேலும் எங்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு வெறுத்துப்போய்விட்டது இந்த வாழ்க்கை.
திரும்பத்திரும்ப இதையே பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால், ஹாங்காங்கில் இருக்கும் உன் தங்கையிடமும் நீயே இந்த விஷயத்தைச் சொல்லிவிடு என்றபடி ஃபோனை வைத்துவிட்டார் அந்த அப்பா.
அண்ணனிடமிருந்து வந்த அழைப்பைக் கேட்டதும் அதிர்ந்துபோனாள் தங்கை. இவங்க நினைச்சா, உடனே விவாகரத்து செஞ்சுக்குவாங்களா? பிரச்சனையை என்னிடம் விடு... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, உடனே, தன் அப்பாவை அழைத்தாள் அவள்.
நீங்க என்னதான் நினைச்சுட்டிருக்கீங்க மனசில... உங்க இஷ்டப்படி, நீங்க அம்மாவை விவாகரத்துச் செய்யமுடியாது. இப்பவே நானும் அண்ணனும் அங்கே புறப்பட்டு வருகிறோம். அதுவரைக்கும் ஏதாவது பிரச்சனை பண்ணினீங்கன்னா... இருக்கு. என்ன, நான் சொல்றது காதில விழுதா? என்று கத்திவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.
முதியவரும் தொலைபேசியை வைத்துவிட்டுத் துணைவியாரிடம் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சொன்னார், அவங்க ரெண்டு பேரும் இப்பவே புறப்பட்டு வராங்க... நம்ம கல்யாண நாளுக்கு. அதுவும் அவங்களோட சொந்த செலவில்...என்று சொல்லிவிட்டு கண்களில் கண்ணீர் வருமளவுக்கு உரக்கச்சிரித்தார். கூடவே சேர்ந்துகிட்டாங்க அவர் மனைவியும்.
இது, பிள்ளைகளுக்காக ஏங்குகிற பெற்றோரைப்பற்றி, நான் மின்னஞ்சலில் படித்த சாதாரணமாகச் சொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாயிருந்தாலும், அது சொல்லும் அர்த்தத்தைக் கட்டாயம் எல்லாரும் புரிஞ்சிக்கணும்.
1. வருஷத்தின் 365 நாளும் யாரும் வேலைவேலையென்று பரபரப்பாக இருப்பதில்லை.
2.வருஷத்தின் சில நாட்கள், வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதால் வானமொன்றும் இடிந்து நம் தலையில் விழுவதில்லை.
3.அலுவலக வேலையும், பணம் சம்பாதிப்பதுமே நம் வாழ்க்கையில்லை. அதற்கு மேலும் அன்பு பாசமென்று விலை மதிப்பற்ற சில விஷயங்களும் இருக்கிறது.
கடல்கடந்து வாழும் மக்களே...கவனம் வையுங்க!
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
சில அழகான பழமொழிகள்!
அநேகப் பழமொழிகள் அழகாக இருந்தாலும், அழகைப்பற்றிமட்டும் சொல்லக்கூடிய சில பழமொழிகள் இவை...
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அழகு, அடைத்த கதவுகளையும் திறக்கும்.
* அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
* அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகளோ கசப்பு.
* அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.
* அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
* அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
* அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
* அழகும், மணமுமுள்ள பூக்கள் சாலையோரத்தில் வாழாது.
******
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)