சனி, 28 நவம்பர், 2009

சம்பளம்!

"எங்கிட்ட காசு கிடையாது...சம்பளம் வந்தாத்தான் சாப்பாட்டுக்கே அரிசி வாங்கமுடியும். தயவு செஞ்சு என்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியயும் கெடுக்காதீங்க. எரிச்சலுடன் சொல்லிவிட்டு, தானும் தன் மகனும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள் பூமதி.

"அடேங்கப்பா, காசு கேட்டா, ராசா மவளுக்கு எவ்ளோ கோவம் வருது... புருஷங்காரன் கஷ்டம்னுசொல்லி காசுகேட்டா பொண்டாட்டிக்காரி தலைய அடகு வச்சாவது குடுக்கணும்டி...அத விட்டுட்டு அம்மாளுக்கு சந்தோஷம் போச்சாம்...நிம்மதிபோச்சாம்.... என்னத்தக் கொண்டுவாறாள்களோ இல்லையோ அப்பன் வீட்லருந்து இந்த திமிர மட்டும் மறக்காம கொண்டுவந்திர்றாளுக.."

உள்ளே போன போதை உசுப்பேத்திவிட்டிருக்க, உரக்கக் கத்திக்கொண்டிருந்தான் அழகேசன். பதில்சொல்லாமல் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள் பூமதி.

பூமதிக்கு உள்ளூரிலிருக்கும் தனியார் பள்ளியில் ஆயா உத்தியோகம். தன் ஐந்து வயது மகன் செந்திலையும் தான் வேலைசெய்யும் அந்தப் பள்ளியிலேயே சேர்த்திருந்தாள்.

திடீரென்று, "டேய் மவனே, அந்த நோட்டை இங்க கொண்டாடா..."

என்று குரல்கொடுத்தான் அழகேசன்.

 அப்பனோட கத்தலையும் அம்மாவின் பதிலையும்,மௌனமாக உள்வாங்கியபடி, எழுதுவதுமாதிரி உட்கார்ந்திருந்த மகன் செந்தில், ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, எழுந்துவந்து நோட்டை அப்பாவிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்த நோட்டில் "நிம்மதி, நிம்மதி" என்று தன் போதையில் நடுங்கும் விரல்களால் கோழி கிறுக்கியதுமாதிரி எழுதிவிட்டு,

"இந்தாடி, நீ கேட்ட நிம்மதி...தலைக்குமாட்டுல வச்சுட்டுத் தூங்கு"

என்று சொல்லி, ஏளனமாய்ச் சிரித்தபடி நோட்டை அவளிடம் விட்டெறிந்தான் அவன். கோபம் பெருகினாலும் அதைக் காட்ட இது தகுந்த சமயம் இல்லையென நினைத்தவளாக, அதை மனதிற்குள் அழுத்திக்கொண்டாள் பூமதி.  அழுத்தப்பட்ட ஆத்திரம் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.

சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவள், நோட்டை எடுத்து மகனின் பைக்கட்டில் வைத்துவிட்டு, மகனைக் கூட்டிக்கொண்டுபோய் பாயில் படுக்கவைத்துவிட்டுத் தானும் படுத்துக்கொண்டாள்.

.............................................

மறுநாள் மாலை... பள்ளிக்கூடத்தைவிட்டு பூமதி மகனுடன் வெளியே வந்தபோது, வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் அழகேசன்.

" பூவு, சம்பளம் வாங்கியிருப்பேல்ல, பணத்தைக்குடு...அடிக்குரலில் கேட்டான் அவன்.

பதில் பேசாமல், பையிலிருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, மகனைக் கையில் பிடித்தபடி வேகமாக நடந்தாள் அவள்.

என்னடி, கவர் மெலிஞ்சுபோயிருக்கு என்று குரல்கொடுத்தபடி, கவரைப் பிரித்தான் அழகேசன். அதற்குள், அவன் கேள்வி எட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தாள் அவள்.

கவருக்குள் எட்டாக மடித்த காகிதம் இருந்தது. "காசை எதுக்கு காகிதத்தில் மடிச்சுவச்சிருக்கா,கழுத..." என்று நினைத்தபடி காகிதத்தைப் பிரித்தான் அவன்....

உள்ளே "சம்பளம்" என்ற வார்த்தை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தவனாக, பேப்பரைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். அங்கேயும் அதே வார்த்தை அவனைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக