அதுபோல இப்போது இன்னுமொரு பயமுறுத்தல் 21/12 /2012 என்ற இலக்கில் மீண்டும் தொடங்கி மக்களை அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது, அதிலும் அதிகமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளை.
நம்ம நாட்காட்டியில் நாளைக்கு என்ன கிழமையென்று தெரியாதவர்கள்கூட இப்போது மாயர்களின் நாட்காட்டியைப்பற்றி மாய்ந்துமாய்ந்து பேசுவது ஆச்சர்யம்தான்.
மாயர்கள், கிமு வில் தோன்றி, கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து, தென்னமெரிக்காவில் குறிப்பாகச் சொல்லப்போனால் குவாதிமாலா பகுதியில் வாழ்ந்த, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்த மனித இனமென்று சொல்கிறார்கள். இவர்கள் வேறுயாருமல்ல, தென்னகத்துத் தமிழினம்தான் என்றுகூட எங்கோ படித்ததாக நினைவு.
திடீரென்று இவர்களுடைய நாட்காட்டிக்கு என்ன ஆனதென்று உங்களுக்குக் கேள்வி எழலாம். மேலே சொல்லப்பட்ட மாயர்களின் நாட்காட்டி, கி.பி. 2012-ல் முடிவடைவது தான் இதற்கெல்லாம் காரணம்.
மாற்றங்கள் பலவற்றைப் பார்த்துப்பார்த்தே பழகிப்போனது நம் மனித இனம். மேடுகள் பள்ளமாகவும், வீடுகள் மணல்மேடுகளாகவும், ஆறு ஊராகவும், ஊரே ஆறாகவும், கடல்கரை குடியிருப்பாகவும், குடியிருப்புக்கள் கடலுக்குள்ளும் கால ஓட்டத்தில் மாறிப்போன கதையைக் கண்டும் கேட்டும் வளர்ந்திருக்கிறோம்.
ஆற்றில் வருகிற நீரெல்லாம் மணலெடுத்த பள்ளத்தில் நிரம்பிவிட, நீருக்குள் இருந்த பகுதியெல்லாம் இன்று மண்மேடாகி மரங்கள் மண்டிக்கிடப்பதை ஆற்றில்மணல் அள்ளும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள்.
அதுபோல,சின்ன வயசிலிருந்தே எங்க ஊர்ப்பக்கம் முதுமொழிமாதிரி ஒன்று சொல்வார்கள். "திருச்செந்தூர் அழிய, துவாரகாபுரி தெரிய..." என்று. ஒருபுறம் பள்ளமாக மறுபுறம் உயரத்துக்கு வரும் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது. தென்கோடியிலிருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் போகும்போது நாட்டின் மேற்குக்கோடியிலிருக்கும் கடல்கொண்ட துவாரகை மீண்டும் வெளியே தென்படும் என்பது முன்னோர் கணக்கு.
இன்றைய நிலைமையில் உலக வெப்பமயமாதலை, வருமென்று சொல்கிற பேரழிவோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கடலோர நகரங்கள் தங்கள் பரப்பளவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.வந்துபோன சுனாமி இந்த அழிவிற்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
வரும்காலத்திலும் இதுபோன்ற பெரும் சுனாமிகளையும், புதையவைக்கும் பூகம்பங்களையும், சுழன்றழிக்கும் சூறாவளிகளையும் உலகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
5125 வருடங்களைக் கொண்ட மாயர்களின் நாட்காட்டி வரும் 21/12/ 2012 அன்றுடன் முடிவுறுகிறது என்கிறார்கள். அந்தக் கணக்குப்படி, அந்த நாளுக்குப்பின் பூமிப்பந்துக்கு ஏதேனும் பேரழிவு நேரலாமென்ற அச்சமே மனிதர்களை ஆட்டிப்படைப்பதோடு, "2012" என்ற பெயரில் படமாகவும் வந்து இன்னும் பயமுறுத்தத்தொடங்கியுள்ளது.
இருக்கிற நாட்களை உற்சாகமாய்க் கழிக்கவிடாமல் மக்களைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்வதே இவர்களுக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. படத்தைப் பார்க்கலாம், படமெடுத்தவரின் கற்பனையை ரசிக்கலாம்...ஆனா, அதையே நினைச்சு பயந்துகிட்டிருந்தா அடுத்துவரும் நாளெல்லாம் அர்த்தமில்லாமல்போய்விடும்.
அதனால, இதில் நாம புத்தியோடு சிந்திச்சுப் புரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா, படம் பார்ப்பவருக்கு பயம் சேரும், படமெடுத்தவருக்குப் பணம் சேரும் என்ற எளிதான கணக்கைத்தான்.
சொல்லிக்கொண்டிருக்கிற கெடுவுக்கு இன்னுமிருப்பது கிட்டத்தட்ட 1105 நாட்கள்தான். அப்போது பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அதுவரைக்கும் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுட்டு, முடிஞ்சவரைக்கும் இயற்கையை சேதப்படுத்தாம, அவரவர் கடமையை ஒழுங்கா செய்துட்டு வருவோம்.
அதுக்கப்புறம் இந்த 2012 ஆம் வருடத்தில் என்ன நடந்துதுன்னு அடுத்த
2013 ல் விவரமா மீண்டும் பேசுவோம்!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக