அம்பாவின் அவலமும்,அவள்செய்த சபதமும்
************************************************
பீஷ்மர் அனுப்பிய பாதுகாவலர்களுடன் சௌபல நாட்டை அடைந்தாள் அம்பா. தான் விரும்பிய மன்னன் சால்வனிடன் சென்று நடந்த விபரங்களை எடுத்துரைத்தாள். பீஷ்மர் தன்னை விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்ததையும் கூறினாள் அவள்.
அம்பாவின் வாய்மொழியைக் கேட்ட மன்னன் சால்வன், ஏற்கெனவே தான் பீஷ்மரிடம் தோல்வி அடைந்த கசப்பான நினைவினில் தோய்ந்திருந்தபடியால்,
" சுயம்வரத்தில் நடந்த போரில் இறுதிவரை போராடி பீஷ்மரிடம் தோற்றுப்போனேன் நான். இனி என்னால் உன்னை மணக்க இயலாது. நீ சென்று உன்னைச் சிறையெடுத்துச்சென்ற பீஷ்மரையே திருமணம் புரிந்துகொள்"
என்று மனவெறுப்புடன்கூறி, அம்பாவை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே அனுப்பிவிட்டான்.
மீண்டும் வந்து பீஷ்மரைச் சந்தித்தாள் அம்பா. மன்னன் சால்வன் தன்னை நிராகரித்ததைக் கூறினாள் அவரிடம். அம்பாவின் துயரம் கண்டு மனவருத்தமடைந்த பீஷ்மர், தம்பி விசித்திரவீரியனிடம் அம்பாவையும் மணம்புரிந்துகொள்ளுமாறு கூறினார்.
" இன்னொருவனை விரும்பிய பெண்னை நான் மணம்புரியமாட்டேன்" என்று விசித்திரவீரியனும் மறுக்க,அம்பாவின் மனதில் இயலாமையால் எழுந்த கோபம் இன்னும் அதிகமாகியது.
"பீஷ்மரே, உம்மால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதனால் நீரே என்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்"
என்று சினத்துடன் கூற, சத்தியம் தவறாத பீஷ்மர், தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ்வதாகச் செய்த சபதத்தை எடுத்துரைத்து, அம்பாவின் வேண்டுகோளை மறுத்தார்.
அம்பாவின் கோபம் அளவின்றிப் பெருக, பீஷ்மரைப் பழிவாங்கிடும் வெறியும், வெறுப்பும் அவள் மனதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
"பீஷ்மரே, என் வாழ்வின் அத்தனை வலிகளுக்கும் காரணமான உம்மைக் கொல்லாமல் விடமாட்டேன்"
என்று சபதம் செய்தாள் அம்பா.
பீஷ்மருக்கு எதிரியான மன்னர்களை ஒன்றுகூட்டி அஸ்தினாபுரத்தின்மேல் படையெடுக்கத் திட்டமிட, பீஷ்மரின் போர்த்திறமைக்கு அஞ்சிய மன்னர்கள் அம்பாவின் வேண்டுகோளை நிராகரித்தனர்.
மன்னர்கள் மறுதலிக்க, மாயோன் மருகனாகிய சுப்ரமணியக்கடவுளின் கருணை வேண்டினாள் அம்பா. அம்பாவின்முன் தோன்றிய அழகுக்கடவுள் அவளுக்கு வாடாத மலர்களுடைய தாமரைமலர் மாலையைக் கொடுத்து,
"இந்த மாலையைச் சூடுபவன் எவனோ, அவன் பீஷ்மருக்கு எதிரியாவான்"
என்று கூற,வாடாமலர் மாலையைச் சூடும் வீரனைத் தேடலானாள் அம்பா. பீஷ்மரின் பராக்கிரமம் அறிந்த யாரும் அம்மாலையைச் சூட முன்வராதுபோக, இறுதியாக மன்னன் துருபதனின் மாளிகைக்குச் சென்று, தன் வேண்டுதலை ஏற்று, மாலையைச் சூடிக்கொள்ளுமாறு கூற, அம்பாவின் துயரம் அதிகரிக்கும்படியாக, துருபத மன்னனும் அதைச் சூட மறுத்துவிட்டான்.
மன்னன் மறுத்த மாலையை, அவன் மாளிகையின் வாயிற்கதவில் தொங்கவிட்டுவிட்டு, கானகம் நோக்கிக் கவலையுடன் சென்றாள் அம்பா. கானகத்தில் கண்ட துறவிகளில் சிலர், அவளுடைய சோகக்கதையைக் கேட்டு, பீஷ்மரின் குருவாகிய பரசுராமரிடம் செல்லும்படி அறிவுறுத்தினர்.
குருவின் ஆணையை பீஷ்மர் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பரசுராமரைச் சென்று சந்தித்தாள் அம்பா. தன் அளவிலாத சோகத்தை அவரிடம் எடுத்துரைத்தாள். அம்பாவின் கதை அவரை நெகிழச்செய்ய, தன் சீடனான பீஷ்மரிடம் அவளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார் பரசுராமர். தன் உறுதிமொழியை மனதில்கொண்டு மறுத்தார் பீஷ்மர். எடுத்த சபதத்தை எக்காரணம்கொண்டும் விடமாட்டேன் என்று கூறிய பீஷ்மரின் பதில் பரசுராமரையும் ஆத்திரம் கொள்ளச் செய்தது.
ஆத்திரம் வலுத்து, ஆசானும் மாணவனும் ஆயுதமேந்திப் போரிட ஆரம்பித்தனர். பலநாள் நீடித்தபோர் இறுதியில் பரசுராமர் பீஷ்மரிடம் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள, பரசுராமர் அம்பாவிடம், பீஷ்மரின் கருணையைப் பெறுதலே கடைசி வழியென்று கூற,பீஷ்மரின் காலில் விழுவதைக் காட்டிலும் பிறைசூடிய பரமனின் பாதத்தில் சரணடைவதே சிறந்தவழியென்று எண்ணி, சிவனை நாடி இமயம் சென்று கடுந்தவம் இயற்றலானாள் அம்பா.
தவத்தில் அகமகிழ்ந்து அம்பாவின் முன் தோன்றினார் ஆலகாலமுண்ட சிவபெருமான். பீஷ்மரைக் கொல்லவேண்டுமென்ற அம்பாவின் வேண்டுகோளைக் கேட்டு,
" பெண்ணே, நீ வேண்டும் வரம் இறை நியதிக்கு மாறானது. யாராலும் கொல்ல இயலாத ஆசிகளையும்,வரத்தையும் பெற்றவன் பீஷ்மன்.ஆனால், மனிதப் பிறவியெடுத்த எவரும் ஒருநாள் மரணமடைந்துதான் ஆகவேண்டும். அதனால், பீஷ்மரை கொல்லும் வரத்தை உனக்கு நான் வழங்குகிறேன். ஆயினும், உன்னுடய இந்தப் பிறவியில் நீ அவரை வெல்ல இயலாது. இன்னொரு பிறவியெடுத்து நீ துருபத மன்னனின் மகளாகப் பிறக்கும்போது உன்னுடைய இந்த ஆசை நிறைவேறும்"
என்று வரமளித்தார் சிவபெருமான்.
அடுத்த பிறவிவரை காத்திருந்து தன் ஆவேசத்தைத் தீர்த்துக்கொள்ள இயலாத அம்பா, துருபத மன்னனின் நாட்டுக்குச் சென்று அங்கு அரண்மனை முன்னர், தீயை வளர்த்து, அந்த நெருப்பில் புகுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
தோல்வியும்,துயரமுமாய், தன் உயிரைமுடித்த அம்பா, துருபத மன்னனின் மகளாக மறுபிறவியெடுத்தாள். பிறவியைக் கடந்தும் பிறழாத உறுதியுடன், இளமை முதலே யுத்தநெறிகளைக் கற்றுத் தெளிந்தாள் அவள். சில ஆண்டுகளுக்குப்பின் அரண்மனை வாயிலில் கிடந்த, அச்சத்தின் காரணமாய் யாரும் தொடாமலே இருந்த, ஆறுமுகக்கடவுள் கொடுத்த அழகிய மலர்மாலையை எடுத்துச் சூடிக்கொண்டாள்.
மகள் சிகண்டினியின் செயலால், அவளுக்கும் தனக்கும் பீஷ்மரால் ஆபத்துவரும் என்று எண்ணிய துருபத மன்னன், அவளை அரண்மனையைவிட்டு காட்டுக்கு அனுப்பிவிட்டான்.காட்டில் கந்தர்வன் ஒருவனின் உதவியால் ஆணாக மாறி சிகண்டி என அழைக்கப்பட்டாள் சிகண்டினி.
சிகண்டி எனும் ஆணின் உருவத்தில் இருந்தபடி,தன் இணையற்ற போர்த்திறனால் புகழ்பெற்று ,மக்களால் மஹாரதி என்று அழைக்கப்பட்டாள் அவள். மனமெங்கும் பரவிய பழியுணர்ச்சியுடன் பீஷ்மரைக் கொல்லும் நாளுக்காகக் காத்திருக்கலானாள் சிகண்டியின் உருவிலிருந்த சினம்கொண்ட அம்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக