நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை... இன்றும் விடுமுறையென்பதால் நேற்று உறங்கப்போகையில் இரவு மணி 1.45 இருக்கும். படுக்கப்போகும்போது, விடியலில் அப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.
காலையில் 6.30 க்கு விழிப்பு வந்தது. கண்ணைக் கசக்கியபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். முன்னறையில், தரையில் சின்னச்சின்ன ஒளிப்பிரதிபலிப்புகள். வெளியிலிருந்துவரும் வெளிச்சம் ஏதோ கண்ணாடியில்பட்டு எதிரொளிக்கிறதோ என்று உற்றுப்பார்த்தேன். தரையில் சின்னச்சின்ன கண்ணாடி மின்னல்கள். அவற்றிலொன்றைக் கையிலெடுத்துப் பார்த்தபடி, எங்கேயிருந்து வருகிறதென்று பார்வையை ஓட்டினேன். டைனிங் ரூம் கதவு பாதியளவு திறந்திருக்க, அங்கேயிருந்து கண்ணாடிச்சில்லுகள் வெளியே சிதறியிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியுடன் கால்களைச் செருப்புக்குள் நுழைத்தபடி அறைக்குள் எட்டிப்பார்த்தேன்.
வீட்டுக்குள் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மூளையில் பளிச்சிட, என் கணவரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, குழந்தைகளின் அறைக்குள் சென்று பார்த்தேன். எல்லாரும் அசந்து தூங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் வந்து டைனிங் ரூமை எட்டிப்பார்த்தேன். அறையின் இன்டீரியருக்குப் பொருத்தமாகத் தேடிப்பிடித்து வாங்கி ஒரே மாதமான கண்ணாடி மேஜை சில்லுசில்லாகச் சிதறிப்போயிருந்தது. வேகமாய்ச்சென்று அறையின் திரையை விலக்கிப்பார்த்தேன். ஜன்னல் மூடியபடியே இருந்தது. வாசல் கதவினைப்பார்த்தேன். அதுவும் இரவில் நான் பூட்டியபடியே இருந்தது.
அறையில் மின்விசிறியின் சுவிட்சைப்போட்டேன். தலையில் விழுந்து சிதறியது கண்ணாடி அட்சதை. அதிர்ந்துதான் போனேன். அறையின் சுவரோரமெங்கும் தெறித்துச் சேர்ந்திருந்த கண்ணாடிச்சில்லுகள். கலவரம் நீங்காமல் வந்து கணினியை உயிர்ப்பித்துப் பார்த்தேன். என்னைப்போல் அனுபவம் ஏகப்பட்டவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறதை நினைத்து இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
வாங்கி இருபத்தொன்பதே நாளில், இப்படியிருந்த எங்க வீட்டு மேஜை,
எந்த ஒரு அதிர்வுக்கும் ஆளாகாமல் இப்படி வெடித்துச் சிதறியதன் மர்மம் என்ன?
மேஜையிலிருந்து சிதறிய பாத்திரம் வைக்கும் தட்டுகள்...
இன்னமும் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு...
அறையின் மூலையெங்கும் சிதறல்கள்...
மேஜைக்கு மேலிருந்த தண்ணீர் ஜாடி தானும் சிதறிப்போய்...
என்னைப்போன்ற சிலரின் அனுபவங்கள்
இங்கே...
இன்னும் இங்கே...
இன்னும், இங்கேயும் கூட...
கண்ணாடியை உருவாக்கும்போது இடையில் ஏதேனும் காற்றுக்குமிழ்கள் இருந்தாலோ, கண்ணாடியைப் பொருத்துகையில் மெல்லிய நூலிழை விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, இன்னும் சில தொழில்முறைக் கோளாறுகளாலோ இவ்வாறு கண்ணாடி வெடித்துச் சிதறும் வாய்ப்பு உண்டு என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன்.
ஆசையாய் வாங்கிய மேஜை சிதறிப்போனாலும், ஒரு சில இடங்களில் நிகழ்ந்ததுபோல ஆபத்தான காயங்களை யாருக்கு ஏற்படுத்தாமல் எல்லாரும் உறங்கும்வேளையில் உடைந்து சிதறியது ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது.
இனிமேலும் வீட்டில் கண்ணாடி மேஜை வாங்கணுமா?
ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிச்சிட்டு வாங்குங்க...
*************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக