சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

*********

சனி, 10 அக்டோபர், 2009

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

************

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

துபாய் மால் (The Dubai Mall) தொடர்ச்சி - புதிய படங்களுடன்

ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்,

"இந்தப்பதிவில்" துபாய் மால் (The Dubai Mall)

பற்றிச் சொல்லியாச்சு.

இன்னும் சில புதிய பகுதிகளைப் பற்றி படங்களுடன் மீண்டும்...

துபாய் மால் ஆரம்பித்த புதிதில் சென்றபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்நடமாட்டம் இருந்தது. நேற்று மறுபடியும் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, சும்மா சொல்லக்கூடாது...நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பைவிடக் கடைகளும் அதிகமாக, கூட்டமும் அதிகமாகத்தான் இருந்தது.
ரமதான் விடுமுறையும் ஆரம்பமாகியிருப்பதால் கடைகளெல்லாம் விதவிதமான விளம்பரங்களோடு களைகட்டியிருந்தன.





கடைகளைத் தவிர்த்து காட்சிக்கு விருந்தாகும் விஷயங்களும் நிறைய இருக்கத்தான் செய்யுது. பரந்து விரிந்த இடவசதி. நேர்த்தியான அலங்காரங்கள்,ஆங்காங்கே உட்கார அழகிய இருக்கைகள்,உணவுக்கூடத்தருகே குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி என்று எல்லாமே அழகாக அமைத்திருக்கிறார்கள்.



சுத்தமாய் மின்னும் தரைப்பரப்பும் இத்தனை இடவசதியும் இருந்தா நம்ம ஊரில் கட்டுச்சோறு கொண்டுவந்து குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லிச் சிரித்தார் ஒருவர் :)

இதோ,இரைச்சலுடன் ஜொலிக்கிற நீரருவி, குதிக்கும் மனிதச் சிற்பங்களுடன்...








மையப்பகுதியில் மின்னும் நட்சத்திர அலங்காரம்...






நிறம் மாறும் தரைப்பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



 


நிஜமோ என எண்ணவைத்த மலர்க் குவியல்கள்...


 


 


இந்தமுறையும் எல்லாத் தளங்களையும் முழுவதுமாய்ப் பார்க்கமுடியவில்லை. சென்றமுறை பார்க்காமல்விட்ட பகுதிகளை மட்டுமே பார்த்தோம். ஆனாலும் அதுக்கே நாலுமணி நேரம் ஆகிப்போச்சு.ஏன்னா, மாலின் (mall)பரப்பளவு அத்தனை பெரியது. இன்னும் பார்க்காமல் விட்ட பகுதிகளெல்லாம் இனிவரும் அடுத்தபதிவில்...

***********

சனி, 12 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro)

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும், சொன்ன மாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரை மட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது. மறுநாள் காலைமுதல், பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில், புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம். காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில், ஓட்டுனர் இல்லாத, முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும், இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான், ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit) பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட், சில்வர் கார்ட், ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம். ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து, யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது 
வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி, அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள், ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...


**********

வியாழன், 10 செப்டம்பர், 2009

கறிவேப்பிலைத் துவையல்




தேவையான பொருட்கள்:-


கறிவேப்பிலை - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பூண்டு - 1 பல்

புளி - பாக்கு அளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:-

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இரண்டையும் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.

அதனுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து, கறிவேப்பிலை முறுகலாகும்வரை வறுக்கவும்.

வறுத்தவற்றை ஆறவிடவும்.

ஆறியபின்,தேங்காய்த்துருவல்,தேவையான உப்பு, புளி,பூண்டு இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

இந்தத் துவையல் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி இவற்றுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

உளுத்தம்பருப்பு தோலுள்ளதாகவும் இருக்கலாம். சுவை நன்றாகவே இருக்கும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க (7)

வியாசரின் வரலாறும் குருவம்ச விருத்தியும்

அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனுவின் மனைவியான மீனவப்பெண் சத்தியவதி, தன் திருமணத்திற்குமுன் ஒருநாள், தந்தைக்குப் பதிலாகத் தான் யமுனை நதியில் படகோட்டிக்கொண்டிருந்த வேளையில்,வசிஷ்ட முனியின் வழித்தோன்றலான பராசர முனிவர் அங்கு வந்தார். மீனவப்பெண்ணவளின் அழகில் மயங்கிய அவர் அவளை விரும்பி,அவளோடு கூடிவாழ, அவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கரிய நிறமாயிருந்ததால் அக்குழந்தைக்கு கிருஷ்ணன் என்றும், யமுனை நதியின் இடையில் அமைந்த தீவினில் பிறந்ததால் துவிபாயனன் என்றும் அம்மகனுக்குப் பெயரிட்டனர்.(துவீபம் என்றால் தீவு என்று அர்த்தமாகும். உதாரணமாக,சிங்களத்வீபம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?)

சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த, புத்திரர் இருவரும் சந்ததியின்றி இறந்துபோக, பராசரர் மூலம் தனக்குப் பிறந்த தன் மூத்த மகனான வியாசமுனிவரிடம் சென்று குருவம்சம் தழைக்க வழிசெய்யுமாறு கூறினாள் அன்னை சத்தியவதி.

அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வியாசமுனிவரும், விசித்திரவீரியனின் மனைவியரான அம்பிகா, அம்பாலிகாவைத் தன்னிடம் அனுப்பிவைக்குமாறும் தன்னுடைய யோக சக்தியினால் தான் அவர்களுக்கு புத்திரபாக்கியம் தருவதாகவும் கூறினார்.

மகனின் பதிலில் மகிழ்ந்த அன்னை சத்தியவதி முதலில் அம்பிகாவை வியாசரிடம் அனுப்பி வைத்தாள். வியாசரின் உருவத் தோற்றத்தைக் கண்டு அஞ்சியதாலும், கூச்ச உணர்வினாலும் வியாசரின் அருகில் வந்ததும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அம்பிகா. அதனால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறக்க அதற்கு திருதராஷ்டிரன் எனப் பெயரிட்டனர்.

பார்வையற்ற குழந்தை பின்னாளில் அரியணை ஏற இயலாது என்று எண்ணிய சத்தியவதி, தம் இரண்டாவது மருமகளான அம்பாலிகாவை முன்னதாகவே எச்சரிக்கை செய்து, வியாசரின் யோகத்துக்கு ஒத்துழைக்குமாறு கூறி அனுப்பிவைத்தாள். ஆனால், அச்சத்தின் காரணமாய் அவளும் முகம் வெளுத்துப்போக, அவளுக்கு பாண்டு எனும் பெயருடைய உடல் வெளுத்த,சோகையுற்ற பிள்ளை பிறந்தது. இந்தக் குழந்தையும் சத்தியவதிக்கு திருப்தியளிக்காததால் மீண்டும் மகன் வியாசரைச் சென்று வேண்டினாள்.

அன்னையின் வேண்டுதலை ஏற்று, வியாசமுனிவரும் மருமகள் இருவரில் ஒருத்தியை மீண்டும் அனுப்பிவைக்குமாறு சத்தியவதியிடம்கூற, இந்தமுறை, அம்பிகாவும் அம்பாலிகாவும் சேர்ந்து, அவர்களுடைய பணிப்பெண் ஒருத்தியை அலங்கரித்து வியாசரிடம் அனுப்பி வைத்தனர். அச்சமோ, பயமோ இன்றி வியாசரின் யோகமுறைக்கு உடன்பட்ட அப்பணிப்பெண்ணுக்கு, அறிவும் ஆரோக்கியமுமான ஆண் குழந்தை பிறந்தது. அவரே பின்னாளில் விதுரர் என அழைக்கப்பட்டார்.

ஆக, வாரிசின்றிப்போன குருவம்சம் வியாசரின் மூலமாக வாரிசை அடைந்தது.

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (2) **மந்த்ராலயம்**

முதல்நாளை ஆதோனியில் கழித்துவிட்டு,மறுநாள், மகான் ராகவேந்திரரின் மந்திராலயத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். ஆதோனியிலிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணம்.வழியெங்கும் மலைகளும், வானம்பார்த்த பூமியுமாகக் காணப்பட்டது.





முதலில் துங்கபத்ரா நதியினைப் பார்த்துவிட்டு அப்புறம் ஆலயத்திற்குள் சென்றோம்.

சிறிதளவே நீரோடிய துங்கபத்திரா நதி...



முதல்முறையாக அங்கு செல்வதால் ஆலய வரலாற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பகவான் நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு, குடல்கிழித்து உயிர்குடித்த இரண்யகசிபுவின் மகன் பக்தப் பிரகலாதனின் அவதாரமாகவே மகான் ராகவேந்திரர் இங்கு வழிபடப்படுகிறார்.

நதிக்கரையில் மரங்கள் சூழ்ந்த பிருந்தாவனப் பகுதியில் மகான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்ததாகவும் அவர் இறைவனோடு கலந்து முக்தியடைந்த இடத்தில் துளசிமாடம் போன்ற அமைப்புடன் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறக் கேட்டோம்.ஆலயத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. சுத்தம் சுத்தம் எங்குபார்த்தாலும் சுத்தம்.மகானின் அமைதி நிலவும் ஆலயத்தில் மோனத் தவமிருக்கும் பக்தர்கள் பலரைக் காணமுடிகிறது.

தரிசனம் முடிந்து வெளிவருகையில் துளசிதள தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆலய வளாகத்தினுள்ளேயே போஜன சாலையும் அமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த மரங்களுக்கிடையேதான் மகானின் ஆலயம் அமைந்திருக்கிறது.



கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு மாஞ்சாலா என்ற கிராமமாக இருந்ததாகவும், மந்திராலயம் கோவிலுக்கு இடமளித்த அம்மையாரும் மாஞ்சாலம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாகவும் கூறினர். முகப்பிலமைந்திருக்கும் மாஞ்சாலம்மன் சன்னிதியைத்தான் ராகவேந்திரரை வழிபடுமுன் அனைவரும் வழிபடுகிறார்கள்.

இதோ, ராகவேந்திர பிருந்தாவனத்தின் அழகிய நுழைவாயில்...





ஆலய முகப்பின் முழுத்தோற்றம்...



ஆலயத்தின் முகப்பில் ராகவேந்திரர் திருவுருவம்...



ஆலயத்தின் வெளியே அழகிய பிருந்தாவனம். மலர்ச் செடிகள் பூத்து அழகூட்டுகிறது. செயற்கை நீரூற்றுகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.







பிருந்தாவனத்து மான்களில் சில...



ஆலயத்திற்குவரும் பக்தர்கள் தங்க வசதியாக, மிக அருகிலேயே அறைகள் உள்ளது.வங்கி வசதிகளும் அருகிலேயே உள்ளது.

ஆலயத்திலிருந்து ஆதோனிக்குத் திரும்பும்போது நேரம் இரவாகிவிட்டது. அந்தப் பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் அடிக்கடி நடக்குமென்று கூடவந்தவர்கள் சொல்லி கிலியைக் கிளப்ப, மந்திராலய மகானை மனதில் நினைத்தபடி எந்தத் தொந்தரவுமில்லாமல் வந்துசேர்ந்தோம்.

மொத்தத்தில் இந்த ஆந்திரப்பயணம் மனதுக்கு மிகவும் நிறைவாய் அமைந்திருந்தது.

புதன், 1 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (1)

வருஷா வருஷம் விடுமுறை வந்தாலும், பார்த்த இடங்களையே பார்த்துவிட்டுச் செல்வது அலுப்பாய்த் தோன்ற, சட்டென்று முடிவெடுத்து, ஆந்திர மாநிலத்துப்பக்கம் பார்த்துவரலாமென்று முடிவெடுத்தோம். ஆந்திராவில் திருப்பதியைத் தாண்டியறியாத எனக்கு இந்த ஆந்திரப் பயணம் மிகவும் ஆர்வமான விஷயமாகவே இருந்தது.

சென்னையிலிருந்து 494 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆதோனி நகரத்தை நோக்கி, சென்னையிலிருந்து இரவு புறப்படும் மும்பை ரயிலில் புறப்பட்டோம். சுந்தரத் தெலுங்கின் வாசனையும், சுவையில் காரமே மிஞ்சிய ரயில் பயண உணவுகளையும் ரசித்தபடி பயணித்தோம். வழியெங்கும் தென்பட்ட இயற்கை விழிகளைக் குளிர்வித்தது.







வழியில் வேடிக்கை காட்டிய இவரையும் பாருங்க...



காலை பத்துமணியளவில் ஆதோனியை அடைந்தோம். இளந்தூறலுடன் இனிதாக வரவேற்றது
ஆதோனி நகரம். ஆதோனியில் வரவேற்ற இயற்கையின் நுழைவாயில்...



இரண்டே நாட்களில் புறப்படவேண்டுமே என்று போன உடனே வருத்தம்தான் வந்தது. எங்கே பார்த்தாலும் அழகு. கொடிகள் பறக்கும் அழகிய சிறு ஆலயங்கள். நிறுத்திவைத்தாற்போல பாறைகள் நிற்கும் சிறு சிறு குன்றுகள். படர்ந்திருக்கும் பசுமையென்று மனசு அழகில் லயித்துத்தான் போனது. அமைதி குடிகொண்டிருந்த மந்திராலய மஹானின் ஆலயத்தையும் ஆங்காங்கே நீர் தெரிந்த துங்கபத்ரா நதியையும் கூட இந்தப்பயணத்தில் பார்த்தோம்.





இனி,ஆதோனி நகரத்தின் வரலாறு கொஞ்சம்...

பதினாறாம் நூற்றாண்டுவரை யாதவகிரியாக இருந்த ஆதோனி நகரம் முகலாயர்களின் பிடியிலிருந்தபோது ஆதவனியாகி தற்போது ஆதோனி என்றழைக்கப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த இந்த நகரம், ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாகாணத்தின் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்டதாயிருந்தது. தென்னகத்தின் தானியச் சந்தையாகவும் விளங்கியிருக்கிறது.

மலைகள் சூழ அழகுடன் விளங்கும் இன்றைய ஆதோனி நகரம், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட பருத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகளுடன் இரண்டாவது மும்பை என மக்களால் அழைக்கப்படுகிறது. மலையில் அமைந்திருக்கும் ஹனுமான் கோயில் இங்கே மிக விசேஷமானது. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் 'ராம் ஜல்' என அழைக்கப்படும் இயற்கை நீர்த்தேக்கமே இங்குள்ள மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. துங்கபத்ரா நதியிலிருந்துவரும் நீரே இதற்கு ஆதாரமாகும்.

இங்குள்ள மக்களின் வழிபாட்டில் ராமபிரானும், ஆஞ்சனேயரும் முக்கிய இடம்பிடிக்கிறார்கள்.எங்குபார்த்தாலும் ராமபக்த ஹனுமான் கண்ணில்படுகிறார். முகம்மதியர்களும் இங்கே அதிக அளவில் வசிக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி ஜாமியா மசூதி மற்றும் பல மசூதிகளும் இங்கே உள்ளது.

பசுமையின் போர்வையில் மசூதி ஒன்று...



இதோ, மலையிலிருக்கும் ஹனுமான் ஆலயம்.
மலைக்குச் சென்று பார்க்க நேரமில்லாததால் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்த மலைக்கோயிலை புகைப்படக்கருவிமூலம்தான் பார்க்க நேர்ந்தது...



அருகிலிருந்த அழகிய ஆஞ்சனேயர் ஆலயம் ஒன்று...



குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று நம் தமிழ்நாட்டில் நாம் சொல்லுவோம்.
ஆந்திரமாநிலத்தில் மலையெல்லாம் கடவுளென்று மக்களெல்லாம் சொன்னார்கள்.மலையெல்லாம் மகேசனாக, இயற்கையாய் அமைந்த அழகு நந்தி...



நந்தியின் வடிவம் கொஞ்சம் தொலைவிலிருந்து...



இந்தப் பாறையிலும் இறைவடிவம் உண்டென்று சொன்னார்கள்.எனக்குத் தெரிந்தது. உங்களுக்கும் தெரியுதான்னு பாருங்க...



முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு சான்றாக அவர்கள் காலத்துக் கல்கோட்டையின் மிச்சம் இன்னும் அங்குள்ள மலைமீது காணப்படுகிறது.



அழகு நிறைந்த ஆதோனி மற்றும் ஆந்திரச் சுற்றுலாவின் தொடர்ச்சி இனி அடுத்த பகுதியில்...