சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (1)

வருஷா வருஷம் விடுமுறை வந்தாலும், பார்த்த இடங்களையே பார்த்துவிட்டுச் செல்வது அலுப்பாய்த் தோன்ற, சட்டென்று முடிவெடுத்து, ஆந்திர மாநிலத்துப்பக்கம் பார்த்துவரலாமென்று முடிவெடுத்தோம். ஆந்திராவில் திருப்பதியைத் தாண்டியறியாத எனக்கு இந்த ஆந்திரப் பயணம் மிகவும் ஆர்வமான விஷயமாகவே இருந்தது.

சென்னையிலிருந்து 494 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆதோனி நகரத்தை நோக்கி, சென்னையிலிருந்து இரவு புறப்படும் மும்பை ரயிலில் புறப்பட்டோம். சுந்தரத் தெலுங்கின் வாசனையும், சுவையில் காரமே மிஞ்சிய ரயில் பயண உணவுகளையும் ரசித்தபடி பயணித்தோம். வழியெங்கும் தென்பட்ட இயற்கை விழிகளைக் குளிர்வித்தது.







வழியில் வேடிக்கை காட்டிய இவரையும் பாருங்க...



காலை பத்துமணியளவில் ஆதோனியை அடைந்தோம். இளந்தூறலுடன் இனிதாக வரவேற்றது
ஆதோனி நகரம். ஆதோனியில் வரவேற்ற இயற்கையின் நுழைவாயில்...



இரண்டே நாட்களில் புறப்படவேண்டுமே என்று போன உடனே வருத்தம்தான் வந்தது. எங்கே பார்த்தாலும் அழகு. கொடிகள் பறக்கும் அழகிய சிறு ஆலயங்கள். நிறுத்திவைத்தாற்போல பாறைகள் நிற்கும் சிறு சிறு குன்றுகள். படர்ந்திருக்கும் பசுமையென்று மனசு அழகில் லயித்துத்தான் போனது. அமைதி குடிகொண்டிருந்த மந்திராலய மஹானின் ஆலயத்தையும் ஆங்காங்கே நீர் தெரிந்த துங்கபத்ரா நதியையும் கூட இந்தப்பயணத்தில் பார்த்தோம்.





இனி,ஆதோனி நகரத்தின் வரலாறு கொஞ்சம்...

பதினாறாம் நூற்றாண்டுவரை யாதவகிரியாக இருந்த ஆதோனி நகரம் முகலாயர்களின் பிடியிலிருந்தபோது ஆதவனியாகி தற்போது ஆதோனி என்றழைக்கப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த இந்த நகரம், ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாகாணத்தின் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்டதாயிருந்தது. தென்னகத்தின் தானியச் சந்தையாகவும் விளங்கியிருக்கிறது.

மலைகள் சூழ அழகுடன் விளங்கும் இன்றைய ஆதோனி நகரம், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட பருத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகளுடன் இரண்டாவது மும்பை என மக்களால் அழைக்கப்படுகிறது. மலையில் அமைந்திருக்கும் ஹனுமான் கோயில் இங்கே மிக விசேஷமானது. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் 'ராம் ஜல்' என அழைக்கப்படும் இயற்கை நீர்த்தேக்கமே இங்குள்ள மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. துங்கபத்ரா நதியிலிருந்துவரும் நீரே இதற்கு ஆதாரமாகும்.

இங்குள்ள மக்களின் வழிபாட்டில் ராமபிரானும், ஆஞ்சனேயரும் முக்கிய இடம்பிடிக்கிறார்கள்.எங்குபார்த்தாலும் ராமபக்த ஹனுமான் கண்ணில்படுகிறார். முகம்மதியர்களும் இங்கே அதிக அளவில் வசிக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி ஜாமியா மசூதி மற்றும் பல மசூதிகளும் இங்கே உள்ளது.

பசுமையின் போர்வையில் மசூதி ஒன்று...



இதோ, மலையிலிருக்கும் ஹனுமான் ஆலயம்.
மலைக்குச் சென்று பார்க்க நேரமில்லாததால் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்த மலைக்கோயிலை புகைப்படக்கருவிமூலம்தான் பார்க்க நேர்ந்தது...



அருகிலிருந்த அழகிய ஆஞ்சனேயர் ஆலயம் ஒன்று...



குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று நம் தமிழ்நாட்டில் நாம் சொல்லுவோம்.
ஆந்திரமாநிலத்தில் மலையெல்லாம் கடவுளென்று மக்களெல்லாம் சொன்னார்கள்.மலையெல்லாம் மகேசனாக, இயற்கையாய் அமைந்த அழகு நந்தி...



நந்தியின் வடிவம் கொஞ்சம் தொலைவிலிருந்து...



இந்தப் பாறையிலும் இறைவடிவம் உண்டென்று சொன்னார்கள்.எனக்குத் தெரிந்தது. உங்களுக்கும் தெரியுதான்னு பாருங்க...



முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு சான்றாக அவர்கள் காலத்துக் கல்கோட்டையின் மிச்சம் இன்னும் அங்குள்ள மலைமீது காணப்படுகிறது.



அழகு நிறைந்த ஆதோனி மற்றும் ஆந்திரச் சுற்றுலாவின் தொடர்ச்சி இனி அடுத்த பகுதியில்...

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துபாய் மால் (The Dubai Mall)

பன்னிரண்டு மில்லியன் சதுரஅடிப் பரப்பளவு, கிட்டத்தட்ட 50 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவைவிடப் பெரியதாய்ப் பரந்துவிரிந்திருக்கும் துபாய் மால், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாயின் (Burj dubai) அடிவாரத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரும் ஷாப்பிங் மால்களுள் ஒன்று. உலகப்புகழ்பெற்ற 600 நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் தற்போது இங்கே இருக்கிறது. இதுதவிர,இன்னும் 600 கடைகளுக்கான இடம் இன்னும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கிறதாம்.





இங்கே அமைந்திருப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஆபரணங்களுக்கான விற்பனைப்பகுதி என்று சொல்கிறார்கள். 220 நகைக்கடைகள் இங்கே ஒரே இடத்தில் இருக்கிறதாம். அதனால் வரும்போது மறக்காம பை நிறைய்ய்ய பணம் எடுத்துட்டு வாங்க.

இதோ, தங்கச்சுரங்கத்தின் நுழைவாயிலில்...







இதுதவிர பொழுதுபோக்குக்காக, டிஸ்கவரி செண்டர், துபாய் ஐஸ் ரிங் எனும் பனிச்சறுக்கு விளையாட்டுத்திடல் மற்றும் துபாய் அக்வேரியமும்(மீன் காட்சியகம்) இங்கே அமைக்கப்பட்டுள்ளது.காலையிலேயே நுழைந்தாலும் இரவுக்குள் முழுப்பகுதியையும் சுற்றிப்பார்க்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.













மீனோடு மீனாக மனிதர் ஒருவர்...



பனியில் சறுக்கி விளையாடுகிறார்கள் சிறியவர்களும் பெரியவர்களும்...











உற்சாகமாய் உறைபனியில் விளையாட்டு நடக்கையில் சட்டென்று ஒரு விபரீதம் நடந்தது.
கீழே விழுந்த ஒரு பெண் வலியில் துடிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த முதலுதவிக்குழுவினர்...





மையப்பகுதியில், உலோகத்தால் அமைக்கப்பட்ட தரைஓவியம்...



மையப்பகுதியிலுள்ள இந்த விதானத்தில் ஏற்படும் நிறமாற்றத்திற்கேற்ப தரையிலுள்ள உலோகப்பரப்பும் அழகழகாய் மாறுகிறது.



விளக்கொளியில் பொன்னாக மின்னும் அழகு...



அன்றைய பொழுதில் பார்க்கமுடிந்தது இவ்வளவுதான். சுற்றிய காலுக்கு ஆறுதலாக, பரந்துகிடக்கும் food court ல் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, மிச்சப்பகுதிகளை இன்னொரு நாளுக்கு ஒதுக்கிவிட்டுத் திரும்பினோம்.

*******

புதன், 17 டிசம்பர், 2008

அமீரகத் தலைநகரில் அழகின் ஆலயம் - 2

மசூதியின் தரைப்பரப்பெங்கும் வண்ணமயமான அழகு. பலவண்ண சிறுசிறு மார்பிள் கற்களைச் சேர்த்து தரையெங்கும் அமைத்திருந்த பூக்களும் இலைகளும் மிகவும் அழகாக இருந்தது.

அவற்றில் சில இதோ...






மசூதியைச் சுற்றி வருகையில் ஒவ்வொருபுறமும் ஒவ்வொரு அழகாய்த் தெரிந்தது. ஆனால்,சில இடங்களில், இன்னமும் பணிகள் முழுமையடையாமலும் தென்பட்டது....



நீரில் பிரதிபலிக்கும் நெடிய தூண்களின் அழகு...



மசூதியின் உயர்ந்த கோபுர அமைப்பில் ஒன்றும் அருகில் நிலாவும்...



வி.ஐ.பி க்களுக்கான சிறப்பு வாயில்...



மசூதியின் உட்புறச் சுற்றுப்பாதை...



மசூதிக்கு வெளியே, இன்னொரு சிறிய மசூதியில் மன்னர் ஷேக் செய்யத் அவர்களை அடக்கம் செய்த இடம் உள்ளது. இங்கே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.அதனால் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த மசூதியின் புகைப்படம்...



மாபெரும் கனவுகளுடன், அமீரகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மன்னர் ஷேக் செய்யத் அவர்களின் நினைவிடத்தையும் தரிசித்துவிட்டு அபுதாபி நகரத்திற்குப் புறப்பட்டோம்.

அமீரகத் தலைநகரில் அழகின் ஆலயம் - 1

அபுதாபி நகருக்குள் நுழையுமுன்னதாகவே சாலைவழியில் கண்ணைக் கவரும் அபுதாபியின் கிராண்ட் மாஸ்க் ( Grand Mosque)எனப்படும் ஷேக் செய்யத் மசூதியைப் பலமுறை காரில் இருந்தே பார்த்துக்கொண்டு சென்றதுண்டு.

இதோ,தொலைவிலிருந்து...



சமீபத்திய விடுமுறையின்போது அதை அருகில் போய் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது போங்க...ஓவ்வொரு கல்லிலும் கலைநயமும் காசின் நயமும் நல்லாவே தெரியுது.

கொஞ்சம் அருகிலிருந்து...



கிட்டத்தட்ட 22,000 சதுரமீட்டர் பரப்பில், 30,000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் அளவுக்கு மிகப்பெரியதாக அமைந்துள்ளது மசூதி. 70 மீட்டர் உயரமுள்ள நான்கு கோபுர அமைப்புகளுடன் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும் இந்த மசூதியின் அருகிலேயே, இம்மசூதியைக் கட்டிய ஷேக் செய்யத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய இம்மசூதியை தொழுகை நேரங்கள் தவிர மற்றெல்லா நேரத்திலும், பிற மதத்தவரும் சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள். நாங்கள் போனபோது வெளிநாட்டவர்கள்தான் அதிகம் தென்பட்டனர்.



மின்னொளியில் மசூதியின் தோற்றம்...




நுழைவாயிலில் தென்பட்ட பூவேலைப்பாடுகள்...



உட்புற நுழைவாயிலொன்று...



உள்ளே நுழைந்ததும் கண்ணைக்கவர்ந்த அழகிய தூண்கள்...
அரபு நாட்டின் அடையாளமான ஈச்சமரத்தைப் போன்று இந்தத் தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், எனக்கென்னவோ தூணின் மீது தாமரையைக் கவிழ்த்துவைத்ததுபோலத் தெரிந்தது.நீங்களே பாருங்களேன்...



அரபி வாசகங்களுடன் உட்புறச் சன்னல்கள்...



விதானத்தில் தெரிந்த சித்திரவேலைப்பாடுகள்...



ஒளியின் உபயத்தால் தங்கமாக மின்னும் விதானம்...