மகாபாரதம் என் பார்வையில்...
************************************
பாரத நாட்டின் பெருமைமிகு இதிகாசங்கள் இரண்டினுள் மகாபாரதமும் ஒன்று. வியாச முனிவர் வாய்மொழியாய் உரைக்க, விநாயகப்பெருமானே தன் தந்தத்தை எழுதுகோலாக்கி இந்நூலை எழுதியதாகக் கூறப்படும் புராணக்கதை இந்நூலின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.
பாரத நாட்டிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த மன்னன் பரதனின் வம்சத்தில் எழுந்த போட்டியும் பொறாமையும், சூழ்ச்சியும் அதை வென்ற தர்மமும் ஆகிய அனைத்தையும் விளங்கக்கூறும் வாழ்க்கைக் காப்பியம் இது.
இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் இந்த இதிகாசம், வாழ்க்கைக்கான அறவழியை எடுத்துரைப்பதுடன், பார்த்தனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக பகவத்கீதையையும் நமக்குப் போதிக்கிறது.
நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகிய குழந்தைகளுக்கும், கதையின் சாராம்சம் தெரிந்தும், ஏனைய விஷயங்கள் தெரியாத என்னைப் போன்ற சில பெரியவர்களுக்கும் நம் பண்டைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிய வைக்கும் நோக்குடன், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுந்த சிறு முயற்சியே இந்த மகாபாரத நெடுங்கதையின் எளிமையான வடிவம்.
பாரதக்கதையின் பெருமைகள்
**************************************
பழம்பெருமைகள் நிறைந்த நம் பாரதநாடு முனிவரும் அறிஞர்களும் பிறந்த புண்ணியபூமி. வேதங்களும் வித்தைகளும் புரிந்த சித்தர்கள் வாழ்ந்த பூமி. பாரத மக்கள் அனைவரும் போற்றும் நால்வேதங்களாகிய ரிக், யஜூர், சாம,அதர்வண வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாம் வேதம் எனப்படுமளவுக்கு பெருமைபெற்றது மகாபாரதக்காப்பியம்.
மகாபாரதக்கதை எண்ணிலாத கிளைக்கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலில் கூறப்படாத நீதிக்கருத்துக்கள் எதுவுமே இல்லையெனுமளவுக்கு கதையின் தொடக்கமுதல் இறுதிவரை மனிதவாழ்விற்கான நியதிகள் நிறைந்துகாணப்படுகிறது. முழுக்கமுழுக்க இறை உபதேசமான பகவத்கீதை பாரதக்கதையின் மகுடம் எனலாம். பாரதக்கதையில் சொல்லப்படாத மனித குணங்களே இல்லையெனுமளவுக்கு இன்றைய வாழ்க்கையிலும் எந்த ஒரு மனிதனையும் சித்தரிக்கக்கூடிய கதைமாந்தர்களை நாம் பாரதக்கதையில் காணமுடியும்.
தந்தைக்காகவே தன்னலம் துறந்த பீஷ்மரையும், நட்புக்காக உயிரையும் கொடுத்த கர்ணனையும், பொறாமைக் குணத்தினால் பெருமையை இழந்த துரியோதனையும், தருமமே தன்னுருவாக வாழ்ந்த தர்மனையும், போர்முனையில் பாசத்தால் கலங்கி நின்ற அருச்சுனனையும், பதிபக்தியினால் கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கும் வேண்டாமென, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த காந்தாரியையும் இந்தக்காப்பியத்தில் காணலாம்.
பராசர முனிவரின் புதல்வனான வியாசரால் சொல்லப்பட்ட பாரதம், தும்பிக்கையோனால் கம்பீரமாக தேவமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, அக்கதை வியாசரால் அவரது புத்திரர் சுகருக்கு சொல்லப்பட்டு, தேவலோக சஞ்சாரியான நாரதமுனிவர் அந்நூலைக்கற்று தேவர்களுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறுவர். தேவர்களின் காப்பியம் மனிதர்களை அடைந்து, பிற்காலத்தில் வில்லிப்புத்தூர் ஆழ்வாரால் வில்லிபாரதமாகவும், ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்தாகவும் படைக்கப்பட்டது. எட்டையபுரத்துக் கவிஞன் இந்நூலின் ஒருபகுதியைப் பாஞ்சாலியின் சபதம் என்றபெயரில் மக்களுக்குக் கொடுத்தார்.
இத்தனை பெருமைகள் நிறைந்த, கடவுளும் மனிதனாகிக் கலந்து வாழ்ந்த காப்பியத்தின் பெருமைகள் உலகுள்ளவரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக