செவ்வாய், 11 நவம்பர், 2008

பாரதம் படிக்கலாம் வாங்க...(4)

தந்தைக்கு மணமுடித்த தனயன்!

அன்றும் வழக்கம்போல் காட்டில் வேட்டையாடச் சென்றான் மன்னன் சாந்தனு. நீண்டநேரம் வேட்டையாடிக் களைத்தவன் யமுனையாற்றின் கரைக்கு வந்தான். அப்போது அங்கே படகோட்டிக்கொண்டிருந்த கண்ணிற்கினிய மங்கை ஒருத்தியைக் கண்டான். கண்டதும் காதலுற்றான்.

மீனவப்பெண்ணான அவள்பெயர் சத்தியவதி என்பதை அறிந்துகொண்ட மன்னன், அவளின் தந்தையைச் சந்தித்துப்பேச ஆவல்கொண்டான். மங்கை அவளுடன் மன்னனும் வந்ததுகண்டு அப்பெண்ணின் தந்தையான மீனவர் தலைவன், மன்னனுக்கு பழங்களும் பாலும் தந்து பக்குவமாய் உபசரித்தான்.

உபசரிப்பில் மகிழ்ந்தமன்னன், மீனவன் மகளை மனைவியாக்கிக்கொள்ள நினைக்கும் தன் ஆசையைத் தெரிவித்தான். அது கேட்ட அப்பெண்ணின் தந்தையும் மனம் மகிழ்ந்தான். மன்னனை மருமகனாக அடைய மனம் கசக்குமா என்ன? தன் சம்மதத்தைத் தெரிவித்த பெண்ணின் தந்தையனவன், மன்னனிடம் ,

"மன்னா, என் மகளை உங்களுக்கு மணமுடித்துத்தர எனக்கு சம்மதமே. ஆனால், என் மகளுக்குப் பிறக்கும் மைந்தர்களே உங்களுக்குப்பின் அரியணை ஏறவேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் என் மகளை மணமுடித்துத் தருவேன்" என்று கூற,

மணிமுடிக்குக் காத்திருக்கும் மகன் தேவவிரதனை நினைத்து உள்ளம் வருந்தியவனாக அரண்மனை திரும்பினான் மன்னன்.

மன்னனின் மனவருத்தத்திற்கும் முகவாட்டத்திற்கும் காரணம் புரியாத மைந்தன் தேவவிரதன், ஒற்றர்கள்மூலம் நடந்ததை அறிந்தான். தந்தையின் துயரம்போக்க, தானே மீனவர் தலைவனைச் சென்று சந்தித்தான். தந்தைக்கு அவர் மகளைத்தருமாறு தேவவிரதன் கூற, தன் விண்ணப்பத்தைத் தெரிவித்தான் மீனவர் தலைவன்.

தந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் அரியணையை விட்டுத்தருவதாக உறுதியளித்த தேவவிரதனை நம்பாத மீனவர் தலைவன்,

" அரியணைப்பதவியை இளவரசனாகிய நீங்கள் விட்டுத் தந்தாலும், உங்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் விட்டுத் தருவார்களா?"

என்று வினா எழுப்ப, தந்தையின் விருப்பத்திற்காக, தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்றும் விண்ணையும் மண்ணையும், வானகத்து தேவர்களையும் சாட்சியாகக்கொண்டு சபதம் செய்தான். செயற்கரிய சபதம் செய்த தேவவிரதனை மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர் தேவர்கள். "இன்றுமுதல் நீ பீஷ்மன் என்று அழைக்கப்படுவாய்" என்று அசரீரி எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. பீஷ்மன் என்ற பெயருக்கு 'பிறரால் செயற்கரிய செயல்களைச்(சபதம்) செய்து முடிப்பவன்' என்பது பொருளாகும்.

மகனின் சபதம் கேட்டு மனம் நெகிழ்ந்தான் சாந்தனு மன்னன். தன்னலம் துறந்த மகனைச் சிறப்பிக்க,

"நீ விரும்பி உயிர் நீத்தாலன்றி உன் உயிரை யாராலும் பறிக்க இயலாது"

என்ற மாபெரும் வரத்தை மகனுக்கு அளித்தான்.

பின்னர்,மகன் பீஷ்மரின் விருப்பப்படியே சத்தியவதியை மணந்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்தான் மன்னன் சாந்தனு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக