போனவருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது,விமானம் ஏறுவதற்கு முன்பே பதினைந்து நாளுக்கான பயணத்திட்டம் போட்டாகிவிட்டது. மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார், என் பெற்றோர் என்று ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் ஒதுக்கிய நாட்கள் போக, மிச்சநாட்களை மலைக்கோட்டை விநாயகர், உறையூர் வெக்காளியம்மன், பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் முருகன் என்று கடவுள்களுக்கு ஒதுக்கிவிட எல்லா நாளும் பரபரப்பான பயணங்களாகவே இருந்தது.
பழனி முருகனுக்கு ஒதுக்கப்பட்ட நாளுக்கு முன்தினம் பலவீட்டுச் சாப்பாடும் பலஊர்த் தண்ணீரும் சேராமல் மூத்தமகள் படுத்துக்கொள்ள, "பழனியாண்டவரை இங்கிருந்தே நினைச்சுக்கோ... அடுத்தவருஷம் வரும்போது கட்டாயம் போயிடலாம்" என்று அம்மா சொல்ல பழனித்திட்டம் கேன்சலானது.
பகல் பத்துமணியிருக்கும்... வாடகைக்கு எடுத்த வண்டி சும்மாதானே நிக்கிது, நாம பக்கத்து கிராமத்தில எங்க பெரியம்மா வீட்டுக்குப் போய்வரலாமே என்று என் கணவர் சொல்ல, மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானோம். "நல்லவேளை எனக்கு உடம்பு முடியல... நீங்க போற ஊருக்கு ரோடே கிடையாதுடா" என்று என் மகள் தன் தம்பியை வெறுப்பேத்த, அவனும், "அம்மா, நான் சுட்டி டிவி பாத்திட்டு இருக்கிறேன் நீங்க போயிட்டுவாங்க" என்று ஆரம்பிக்க, அவனை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.
வண்டியிலேறியதும்தான் உரைத்தது, ஒரு ஃபோன் கூடப் பண்ணாமல் புறப்படுகிறோமே என்று...ஃபோன் பண்ணுவதற்கு அவர்கள் நம்பர் தெரியாது அதுவேறு விஷயம்...
என் கணவர், அதெல்லாம் நகரத்துப் பழக்கம் இங்கே அதெல்லாம் தேவையில்லை என்று சமாதானம் சொல்ல அரைமனசுடன் புறப்பட்டோம்.
முக்கிய சாலையைத் தாண்டி, மண்சாலையில் நுழைந்தது வாகனம். இருபுறமும் வயல்கள், எதிர்ப்பட்ட ஒரே ஒரு மினி பஸ், பாதையைக் கடந்து செல்லும் பசு மாடுகள், பறவைகள் தவிர ஆள் நடமாட்டமே இல்லை. இயற்கையை ரசித்துக்கொண்டே ஒருவழியாக ஊருக்குள் நுழைந்து வீட்டிற்குப்போனால் வீட்டில் யாருமில்லை. வாசலில் கோழிகள் மேய்ந்துகொண்டிருக்க, திண்ணையில் ஆடுகள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. "பாட்டி வயலுக்குப் போயிருக்காங்க, இப்ப வந்துருவாங்க..." என்று பக்கத்துவீட்டுச் சின்னப்பெண் தகவல் கொடுத்துவிட்டு, கையோடு போய் கூட்டிக்கொண்டும் வந்துவிட்டாள்.
எங்களைப் பார்த்ததுதான் தாமதம் அத்தைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "ஐயா, என்னைப் பாக்கவா இவ்வளவு தூரம் வேகாத வெயில்ல வந்தீக" என்று சொல்லிச்சொல்லி மாய்ந்துபோய், நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு உட்காரச் சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டுப் பையனைக்கூப்பிட்டு பதநீரும் நுங்கும் வாங்கிவரச் சொன்னார்கள்.பதப்படுத்திய பாலையும், பலமாசம் ஷெல்பிலிருந்த ஜூஸையும் குடித்து மரத்துப்போயிருந்த ருசி நரம்புகள் விழித்துக்கொள்ள, நுங்கு கலந்த பதநீர் தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. அதற்குள் பாட்டியோட கொழுந்தனார் மகன் வெளிநாட்டிலேருந்து குடும்பத்தோடு வந்திருக்காங்க
என்ற செய்தி தெரிந்து, பத்துப்பதினைந்துபேர் வந்து எங்களை வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டு, ஏதாவது உதவி செய்யணுமா என்று அத்தையிடம் கேட்டுவிட்டுப் போனார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் வறுத்தமீனும், பொரித்த முட்டையுமாக ஒரு விருந்தே சமைத்து அத்தை அசத்திவிட, என் கணவர் என்னிடம் மெதுவாகக் கிசுகிசுத்தார்..."பார்த்தியா,போன் பண்ணாம போறோமேன்னு வருத்தப்பட்டியே, போன் பண்ணிட்டுப் போனாலே பிஸ்கட்டையும் காப்பியையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டே நாங்க ரொம்ப பிசி என்று காட்டிக்கொள்(ல்லு)ளும் மனுஷங்க ஊர்ல வாழ்ந்து பழகிட்ட உனக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமா இருக்குமே" என்று சிரிக்க, செயற்கையின் சாயம் கொஞ்சமும் கலக்காத அந்த பாசம் என்னை "ஆமா" என்று தலையசைக்க வைத்தது.
சாப்பிட்ட பின் சிறிது நேரம் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது, திண்ணையில் எங்களுக்காக ஒரு குட்டிச் சாக்குப்பை தயாராக இருந்தது. "என்ன பெரியம்மா?" என்று என் கணவர் கேட்க,ஒண்ணுமில்லைய்யா, நம்ம வயல்ல விளைஞ்ச கடலை, மரத்துல பறிச்ச ரெண்டுமூணு எழனி, கொஞ்சம் கொய்யாப்பழம் அவ்வளவுதான்...வீட்டிலபோயி என் பெரிய பேத்திக்கு ரெண்டு எழனிய வெட்டிக்குடு, சூடு தணிஞ்சி உடம்பு சரியாப்போயிடும் என்று சொல்ல, நெகிழ்ந்து போனவளாய் பையை எடுத்து வண்டியில் வைத்தேன். பை கனமாக இருந்தது. ஆனால், மனசு அந்த உபசரிப்பின் மகிழ்ச்சியில் லேசாகி மிதந்தது.
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக