படம்: "இணையத்திலிருந்து"
மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.
"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.
அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும் பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.
உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.
இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.
சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.
பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.
மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை. "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.
"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட, வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.
"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.
அதற்குள், "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.
என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை பரமசிவம்.
அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.
சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.
பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.
ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.
சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.
நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு 'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.
ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.
ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.
அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.
"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப் பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக