திங்கள், 10 செப்டம்பர், 2018

சங்ககால சமையல்


ஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :-

வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத்துச் சித்திரங்களாக விளங்குகின்றன சங்ககால இலக்கியங்கள்.

படிக்கப்படிக்கப் பெருமிதமும் வியப்பும் தொன்றுமளவுக்கு வாழ்ந்த நம் மூத்த தமிழ்க்குடியின் வாழ்வியல் நெறிகள், வளர்த்த உயிரினங்கள், ஆடிய நடனம், அணிந்த அணிகலன்கள், சூடிய மலர்கள், பாடிய பண், பசித்துப் புசித்த உணவு, ரசித்து விளையாடிய விளையாட்டுக்கள் என்று அவர்கள் வாழ்வின் அத்தனை செய்திகளையும் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிற இந்த இலக்கியங்களுக்குள் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்ற அந்நாளைய உணவுகள் பற்றிய செய்திகள் நம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.


இன்றைக்கு, பச்சரிசி, புழுங்கலரிசி, சிவப்பரிசி, பாசுமதி அரிசி என்று நெல்லரிசி வகைக்குள்ளே நிறைவடைந்துவிட்ட நம் தமிழர்கள், முற்காலத்தில், நெல்லரிசியோடு, வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி என்ற பல்வேறு அரிசி வகைகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்


பரந்து கிடக்கிற சங்க இலக்கியத்தில் உணவு பற்றிய ஏகப்பட்ட செய்திகள் இருக்குமென்பதால் முதலில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படைப் பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிற அந்நாளைய உணவுப்பழக்கவழக்கங்கள் மட்டும் இங்கே...


முதலில், ஆற்றுப்படை பற்றி,  வள்ளல் ஒருவனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்ற புலவன் வறுமையில் வாடுகிற இன்னொரு புலவனை வழிப்படுத்தி அனுப்புகிற பாடல் வகையே சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படை எனும் துறையாகும்.


பத்துப்பாட்டில்,


1. திருமுருகாற்றுப்படை

2.பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை

எனும் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உண்டு.


அவற்றுள், திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் அருள் பெற்ற ஒரு பக்தன், இன்னொரு பக்தனை இறையருள் பெற ஆற்றுப்படுத்தும் பாடல்களாக அமைந்திருப்பதால் இங்கே உணவு பற்றிய செய்திகளில்லாமல், முருகனுக்குப் படையலிட்ட பொருட்களைப்பற்றிய குறிப்புகள் மட்டுமே காணப்படுகிறது.

மன்னன் வீட்டு விருந்தும் உபசரிப்பும் 


பொருநராற்றுப்படையில் பரிசில் வேண்டிச்சென்ற ஏழையொருவனுக்கு, தணலில் வேகப்பட்ட தந்தூரி வகை உணவைக் கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி காணக்கிடைக்கிறது.


"பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை  
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே..."

அதுவும் எப்பேற்பட்ட உணவு, அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சியை, இரும்புக் கம்பிகளில் குத்தி பக்குவமாகச் சமைத்துப் பரிமாற, அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட்டுவிட்டு, அதன் வெம்மை தாளாமல் வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.

அதுமட்டுமன்றி, வேறுவேறு வடிவங்களில் சமைக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களையும் கொண்டு வந்துகொடுத்து அவற்றை முழவின் இசைக்கு விரலியர் நடனமாட, அதனை ரசித்தவாறே உண்ணவைத்து மகிழ்ச்சிப்படுத்துகிறான் மன்னன்.

அதன் பின்னர், சோறும் உண்ணவேண்டுமென்று அந்த வறியவனை வற்புறுத்தி, முனைமுறியாத முல்லை மொட்டினைப்போன்ற விரலளவு நீளமான அரிசிச் சோற்றை, பலவகை பொரித்த காய்கறிகளோடு பரிமாற, அதனைக் கழுத்துவரை நிரம்புமாறு மன்னனுடன் அமர்ந்து உணவருந்திய மகிழ்ச்சியைப் பகிர்கிறான் புலவன்.
,
மக்களின் உணவுமுறையும் உபசரிப்பும்

விதம்விதமான அரிசிச் சோற்றினை நம் மக்கள் வகைவகையான கறிகளுடன் சமைத்துப் பரிமாறிய விதங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை.

மருத நிலமான ஆமூரில்,


"இருங்காழ் உலக்கை இரும்புமுகந் தேய்த்த

அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு"

இரும்பு உலக்கையால் தீட்டிய வெண்ணெல் சோற்றினை, சமைத்த நண்டுக்கறியுடன் பரிமாறியதையும்,


குறிஞ்சி நிலத்துக் கானவர் வீட்டில்,


"சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்"


சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு உடும்புக் கறிப்  பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த உபசரிப்பையும்,


 பசுக்களைப் பராமரித்து, அவற்றின் பாலையும், மோரையும் விற்றுத் தொழில் செய்யும் கோவலர் குடியிருப்புகளில், 


"இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன

பசுந்திணை மூரல் பாலொடும் பெருகுவீர்"

பசுந்தினை அரிசிச் சோறும் பாலும் சேர்த்த பால்சோற்றினை உண்ணத்தருவார்கள்.


மேலும், முல்லை நிலமக்களின், வைக்கோல் வேயப்பட்ட குடியிருப்புகளில்,


"நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர்"


பூளைப்பூவினைப்போன்ற சிறிய வரகரிசிச் சோற்றுடன், வேங்கைப் பூப்போன்ற அவரையின் பருப்பைக் கலந்து பிசைந்த  பருப்புச் சோற்றினைப் படைத்துப் பரிமாறிய பாங்கினையும் காணமுடிகிறது.


இவை மட்டுமன்றி, கூத்தராற்றுப்படை காட்டும் கானகக் குறமகளின் வீட்டில், 

"வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." 


சமைத்த கடமானின் கொழுப்புமிக்க தசையினையும், பன்றியின் தசையினையும், உடும்பின் கறியோடு, புளியும், பசுமோரும் கலந்து உலையிலேற்றிச் சமைத்த மூங்கிலரிசிச் சோற்றுடன் தருவார்கள் என்று நாம் அறியத்தருகிறார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.


அந்தணர் வீட்டு அடிசில்


பெரும்பாணாற்றுப்படையில், வீடுகளில், நாய், கோழி இவற்றை வளர்க்காமல் கிளிகளை வளர்த்து அவற்றுக்கு வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் அந்தணர் வீடுகளில்,


"வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" 


கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெய்யில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்று பாணன் கூறுவதாகப் பாடல்கள் உள்ளன.


வறியவன் வீட்டு உணவு


வள்ளலும் வசதி படைத்தவர்களும் விருந்தளித்த விஷயங்கள் மட்டுமல்லாமல், வறியவரின் உணவுமுறையும் இங்கே காணக்கிடைக்கிறது. நல்லியக்கோடன் எனும் வள்ளலொருவனைக் காணச் செல்கின்றான் பாணன். வறியவனான அவன் வீட்டில்,


"ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து 
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் 
அழிபசி வருத்தம்..."

வாட்டுகிற பசித்துன்பத்திலிருந்து தக்களைக் காத்துக்கொள்ள, உப்பில்லாமல் சமைக்கப்பட்ட வேளைக்கீரையை மற்றவர்கள் தங்கள் வறுமையை அறிந்துவிடக்கூடாதென்று அஞ்சி, வாயிலின் கதவடைத்துக்கொண்டு குடும்பத்தோடு உண்ணுகின்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை  சொல்ல,

வறுமையிலே வாழ்ந்தாலும் கூட வந்தவர்க்கு உணவளித்து வாழும் நிலைமையையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்தியம்புகிறது.

"நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . ."


எயினர் எயிற்றியர் வாழும் ஈச்ச இலையினால் வேயப்பட்ட குடிசை. சமைப்பதற்கு எதுவுமின்றி, தரிசு நிலத்தைத் தோண்டிக்கிளறிச் சேகரித்துக் கொண்டுவந்த புல்லரிசியைக் குத்தி சுத்தம் செய்து, உப்பு நீர்க் கிணற்றில் ஊறிய நீரை உடைந்த பானையிலிட்டு, உலையிலேற்றிச் சமைத்த சோற்றை, சுட்ட கருவாட்டுடன் பரிமாறும் காட்சியையும் காணமுடிகிறது.


இது வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த நம் தமிழர்களின் பெருமை.


இவ்வாறாக ஆற்றுப்படை நூல்கள் நம் மக்களின் அக்கால உணவுப் பழக்கத்தையும் உயர்ந்த நெறிமுறைகளையும் எடுத்தியம்புகிறது.


                                                                           *****




புதன், 25 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டும் சிறுவீட்டுப் பொங்கலும்

தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்று எப்போதும் சொல்வார்கள் நம் மக்கள். இந்தத் தை, இதுவரை உறங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒரு உத்வேகத்தையும் ஒற்றுமையையும் ஒன்றாய்க் கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.

மாற்றங்கள் மட்டுமே மாறாதிருக்கிற இந்த உலகில், மாறி மறந்துபோன விஷயங்களுள் ஒன்றாகிவிடுமோ என்று அச்சப்பட வைத்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு மீண்டும் சாத்தியமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு விஷயம்.

இப்போதெல்லாம் ஊருக்குள் நான்கைந்துபேர் சொந்தமாக மாடு வளர்ப்பதைப் பார்ப்பதே அரிதாகி, ஆவினும் ஆரோக்யாவும் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில், அன்றைக்கெல்லாம், பத்து வீட்டுக்கு ஒரு வீட்டில் கட்டாயம் மாடுகள் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள்,  மாடு வளர்க்கிற வீடுகளில் அவற்றைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமடித்து, கொம்புகளைச் சுற்றிலும் பூச்சூட்டி, சுத்தம் செய்த தொழுவத்தில் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டி விடுவார்கள்.

பின்னர், அலங்கரித்த காளைகள் மற்றும் கன்றுக்குட்டிகளின் கழுத்தில் சல்லிக்காசுகள் அதாவது நாணயங்கள் மற்றும் தேங்காய் பழம் முதலியவற்றையும் துணியில் முடிந்து மாலையுடன் கட்டிவிடுவார்கள். பின்னர் பறையடித்து ஒலியெழுப்பி அந்த மாடுகளைத் தெருவில் ஓடவிடுவார்கள். இளவட்டங்களும் சிறுவர்களும் மாட்டையும் கன்றையும் விரட்டிக்கொண்டு போய், அதன் கழுத்திலிருக்கிற காசு முடிப்பைக் கழட்டி எடுத்துக்கொள்வார்கள். இது கிராமங்களில் போட்டியாக நடத்தப்படாமல் அவரவர் தங்கள் காளைகளைக் கொண்டு தெருவில் மகிழ்ச்சிக்காக நடத்துவது. மாட்டுப் பொங்கலைச்  சிறப்பிக்கிற ஒரு மரபு விளையாட்டு.

இன்றைக்குக் காணும் பொங்கலென்று கொண்டாடப்படுகிற தினத்தில், சிறுவீட்டுப் பொங்கலென்று ஒரு கொண்டாட்டமும் இருந்தது. பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் இது கொண்டாடப்படும். வீட்டு முற்றத்தில் மணலால் கரைகட்டி, ஒரு சிறுவீடு செய்து, அதன் வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பூச்சொருகி அலங்கரிப்பார்கள். பின், அந்த வாசலில் அடுப்புக்கூட்டி, சிறிய பொங்கல் பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்தப் பொங்கலை, அந்தச் சிறுவீட்டுக்குள், சாணத்தில் பிடித்துவைத்த பிள்ளையாரின் முன் வைத்துப் பூசை செய்வார்கள்.

அவர்களின் சிறிய வீட்டில் வைத்த பொங்கலை அண்டை அயலில் உள்ள குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் அந்தக் குழந்தைகளின் முகத்தில் அன்றைக்கு ஒரு அதீத மகிழ்ச்சி தென்படும். இது பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் ஒருநாள். தமிழரின் பண்பாட்டைச் சொல்லும் திருநாள்.

ஆக, தமிழர் திருநாளின் முதல்நாள் சூரியப் பொங்கலாகவும், மறுநாள் உழவுக்கு உறுதுணையான மாடுகளைச் சிறப்பிப்பதாகவும், மூன்றாம் நாள் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் என்பதை ஆங்காங்கே கேள்விப்பட்டாலும் சிறுவீட்டுப் பொங்கல் என்பது கிட்டத்தட்ட மறந்துபோன ஒரு நிகழ்வாகி விட்டது.

ஆணின் வீரத்தைச் சிறப்பிக்க ஜல்லிக்கட்டை நடத்தும் நாம் பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கச் சிறுவீட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்வோம்.

வெள்ளி, 17 ஜூன், 2016

கொசுப் பேச்சுக் கேட்கலாம் வாங்க...




அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...


குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் குட் நைட் கொளுத்துறவங்களா? 

அம்மா கொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு கொரோனா வந்திருக்குதாம்!

                                                                  **********************

ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?

சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்க கூட பழனி வரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு, நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.

*********************


கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப் போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனை நாள் சொல்றது?

மனவி கொசு : உங்களுக்கென்ன, யாரை வேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரை வியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு. 

**********************

அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?

தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க, அதான்...

**********************

கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?

கொசு விமலா : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?

கொசு கமலா : பொறாமையா, அடிபோடீ... பறவைக்காய்ச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...

***********************

மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க, கோயிலூர் பக்கம் இலவசமா கொசு மருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப் பக்கம் போயிராதீங்க.

கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக் கொசு மருந்து வண்டியிலதான் உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.                                                                                                                                                                                                                                                                     :):):):):)

புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******

வியாழன், 10 செப்டம்பர், 2015

மூதுரைக் கதைகள் - 2 புலி கிடந்த புதர்



மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சுதான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிற மாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகு வச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. 

நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக, இறுதியில், போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த வளையலை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில், உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. 

அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில், இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால், அந்த வீடு புலி பதுங்கிக் கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


                                                    **************











சனி, 5 செப்டம்பர், 2015

பாரதியின் கண்ணன்


அவன் என்றைக்கு வந்தான், எப்போது என்னில் கலந்தான், எந்தத் தருணத்தில் என்னைத் தன்னுடையதாக்கினான் எதுவும் புரியவில்லை...ஆனால், அவன் இதயப் பரப்பெல்லாம் வியாபித்து விளையாடுகின்றான். என்ன நினைத்தாலும் கண்ணில் தெரிகிறான்...என் வழிகளில் கரம்பிடித்து வழிப்படுத்திச் சிரிக்கிறான்.


இவனை என்னென்று விளிப்பேன்? யாரென்று நினைப்பேன்? எதுவும் புரியாமல் தவிக்கிற மனசு அவனை எல்லாமாகப் பார்த்து மகிழ்கிறது. இப்படித்தான் வியந்திருக்கிறான் பாரதி.

கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய்,
மாணவனாய், சற்குருவாய், சின்னக்குழந்தையாய், காதலனாய்,
காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய்க் கண்டு வியக்கிறான் அவன். காதலியாகிற கண்ணன் கண்ணம்மாவாகியிருக்கிறான் அவன் கவிதைகளில்.


எத்தனை காதல் அவனுக்குக் கண்னனிடத்தில்! சொல்லத்தெரியாத பிள்ளையெனத் தவிக்கிற அவன் மனது, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று உருகிப்போகிறது. அனைத்தும் அவனென்ற அன்பினில் கட்டுண்டு அகமகிழ்ந்து நிற்கிறது.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான் - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

அவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான். 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.

காதல், மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான், கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுஅவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான்.


அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.


காதல், மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான், கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுமனசு.

எண்ணும்  பொழுதிலெல்லாம் -அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் - அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!

பலவிதமான பிரச்சனைகளின் மத்தியிலும், பற்றுக்கோடாய் ஒரு நம்பிக்கையிருந்தால், மனிதனின் மனது அந்தத் தளைகளில் கட்டுப்படாமல் உயர உயர உற்சாகமாய்ப் பறக்கும். கற்பனைச் சிறகுகொண்டு காற்றிலே மிதக்கும். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் என்கிற உறுதி வரும். பற்றுக்கோடாய்ப் பராசக்தியும், கரம் பற்றி வழிநடத்தக் கண்ணனும் பாரதிக்குக் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் அடிமைத்தளையிலும் ஆனந்த சுதந்திரத்தைக் கண்ணில் கண்டான். 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே"

என்று சிங்கநாதம் எழுப்புகிறான். சோர்ந்து கிடந்த அடிமை மனங்களுக்கு உற்சாகமூட்டுகிறான். மேலும்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்".

என்று தன் கற்பனைச் சிறகுவீசிக் கனவு காண்கிறான். இது ஒரு கவிஞனுக்கே உரித்தான உணர்வு. அவனால் மட்டுமே அப்போதைய நினைவுகளிலிருந்து அப்பால் விலகி, ஒரு அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கமுடியும். அவனும் சஞ்சரித்தான். அழகான ஒரு உலகம் அவன் கண்ணில் விரிந்தது. அடிமைத் தளைகள் நீங்கிய ஒரு ஆனந்த உலகம். கண்ணனின் கரங்களைப் பற்றியபடி கனவுகளோடு மரித்துப் புத்துலகம் போனான் அந்தக் கவிஞன். தன்னை  மகாகவியாய் மக்கள் மனதில் நிறுத்திப்போனான். கண்ணனின் காதல், அவன் வரிகளில் காலங்காலமாய் நிலைத்திருக்கும். காதல் மனங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.