திங்கள், 31 ஜனவரி, 2011

என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!


பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!
(Total cargo cost is Dh1,500)

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல்,
பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க "இங்கே" பாருங்க...

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.

நன்றி: Gulf News


புதன், 26 ஜனவரி, 2011

பிடிசாபமும், பி.டி கத்தரிக்காயும்!

வரகரிசிச்சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுர வெனவே புளித்த தயிரும்,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.

வழுதுணங்காய் என்று அன்றைக்கு வாய்நிறைய அழைக்கப்பட்ட நம் கத்தரிக்காயின் ருசி, முற்றும்துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. ஊரூராய்ப் பயணித்துக்கொண்டிருந்த நம் ஔவைப்பாட்டியையும் அது அசத்தியதன் சாட்சியே மேலேயிருக்கும் பாடல்.

புல்வேளூரிலுள்ள பூதன் என்பவருடையவீட்டில் உணவருந்திய நம் பாட்டி, அங்கே கிடைத்த வரகரிசிச்சோற்றை, புளித்த தயிர்சேர்த்துப்பிசைந்து, வழுதுணங்காய் வதக்கலுடன் வயிறுநிறையச் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுக்கு ஈடாக உலகத்தையே கொடுக்கலாமென்று மனமுவந்து சொல்லியிருக்கிறாள்.

அங்கே அப்படியென்றால் இது, மனைவியின்மீதுள்ள கோபத்தால், கத்திரிக்காய்க்குச் சாபம் கொடுத்த முனிவரொருவரின் கதை...

 சுற்றியுள்ள கிராமத்து மக்களெல்லாம் சங்கடங்கள் நேரிடுகையில் வந்து அந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றுச்செல்வது வழக்கம். அன்றைக்கும் ஒரு குடியானவன் வந்து தன் குறைகளைச்சொல்லி, அறிவுரைபெற்றுச் செல்கையில் முனிவருக்குத் தன் தோட்டத்தில் விளைந்த சுவையான கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனானாம்.

நீராடச்சென்ற முனிவர் தன் பத்தினியிடம், கத்தரிக்காய்களைக் கறிசமைத்துவை நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச்சென்றாராம். கணவர் சொல்தவறாதவளாக,  அந்தப் பிஞ்சுக்கத்தரிக்காய்களைப் பசுநெய்யில் தாளித்து, உப்பிட்டு வதக்கினாளாம் முனிவரின் மனைவி. வதக்குகிற வாசனையில் வாயூற, ஒரு துண்டை எடுத்துச் சுவைபார்த்தாளாம். அபாரமான ருசியில் ஆசை அதிகமாக, ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிட இறுதியில் ஒற்றைத்துண்டுமட்டுமே மிஞ்சியதாம்.அதையும் கணவருக்குக் கொடுக்கவா வேண்டாமா என்று அல்லாடியதாம் அவள் மனசு.

அதற்குள் நீராடச்சென்ற முனிவர் வந்து, உணவு பரிமாறு என்று உத்தரவிட்டாராம். வடித்த சாதத்தை ஒற்றைத்துண்டு கத்திரிக்காய் வதக்கலுடன் கொண்டுவந்து வைத்தாளாம் அவள்.
மிச்சக் கறியை எங்கேயென்றாராம் அவர். மொத்தமும் அவ்வளவுதானென்று அஞ்சியஞ்சிச் சொன்னாளாம் அவள்.

பர்த்தாவுக்குக் கொடுக்கக்கூட மனசில்லாதபடிக்கு, உன்னைத் அள்ளித்தின்னவைத்த அந்தக் கத்திரிக்காயில், இன்றுமுதல் புழுக்கள் குடியேறட்டும் என்று சாபமிட்டாராம் முனிவர். அன்றிலிருந்துதான், கத்தரிக்காய்க்குள் புழுக்கள் குடியேறியதாம்.

அன்றைக்குக் குடியேறிய புழுக்களை, இன்றைக்கு வெளியேற்ற, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் மரபணு மாற்றம்பெற்ற கத்தரிக்காய்கள், அதாவது B.T. Brinjal.

பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis, (B.T) என்ற நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட, நச்சுத்தன்மையுள்ள டி.என்.ஏ வை கத்தரிச்செடிகளில் உட்செலுத்தி, கத்தரிக்காய்களிலுள்ள பூச்சிகளை அழிக்கமுடியுமென்று கண்டறிந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

செடிகளிலேயே பூச்சிகளைக்கொல்லும் தன்மைவந்துவிடுவதால், விவசாயிகள் கத்தரிச்செடிக்குப் பூச்சிமருந்துகள் அடிக்கவேண்டிய அவசியமில்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உட்கொண்ட எலிகளுக்கு, உடலுறுப்புகளில் பாதிப்பும் உடலியக்கத்தில் பிரச்சனைகளும்கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், உண்ணுகிற உணவு என்று அத்தனையும் மாசுபட்டுப்போயிருக்கிறதென்று இன்றைக்குநாம் அறிந்துகொண்டிருப்பதுபோல, இந்தக் கத்திரிக்காய்கள் பெரிதாய் என்னசெய்துவிடப்போகின்றன என்பதும் கால ஓட்டத்தில் கட்டாயம் தெரியவரும். அதுவரைக்கும், நாமும் கத்தரிக்காய் வதக்கலைக் கவலையில்லாமல் சாப்பிடுவோம்.

                                                 ************




  

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஒன்றொடு இன்னொன்று!

வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.

சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.

வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.

அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும்.

வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.

அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார்.

காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு, அங்கே கையை நீட்டிக்காட்டினாள் அவள்.

கைகாட்டியதிசையில், கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்க? இந்தப் பொண்ணோட பாவம், உன்னைச் சும்மாவாடா விடும்?

வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.

அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு அழுகை. கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி.

"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா.

மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.

அப்போது, என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு, தன் தாய் தந்தையுடன் நடந்தாள் சரவணனின் முதல் மனைவி.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள்.

சொந்தக்காலில் நின்று அவனுக்கு முன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல். 

*******