வரகரிசிச்சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுர வெனவே புளித்த தயிரும்,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.
வழுதுணங்காய் என்று அன்றைக்கு வாய்நிறைய அழைக்கப்பட்ட நம் கத்தரிக்காயின் ருசி, முற்றும்துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. ஊரூராய்ப் பயணித்துக்கொண்டிருந்த நம் ஔவைப்பாட்டியையும் அது அசத்தியதன் சாட்சியே மேலேயிருக்கும் பாடல்.
புல்வேளூரிலுள்ள பூதன் என்பவருடையவீட்டில் உணவருந்திய நம் பாட்டி, அங்கே கிடைத்த வரகரிசிச்சோற்றை, புளித்த தயிர்சேர்த்துப்பிசைந்து, வழுதுணங்காய் வதக்கலுடன் வயிறுநிறையச் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுக்கு ஈடாக உலகத்தையே கொடுக்கலாமென்று மனமுவந்து சொல்லியிருக்கிறாள்.
அங்கே அப்படியென்றால் இது, மனைவியின்மீதுள்ள கோபத்தால், கத்திரிக்காய்க்குச் சாபம் கொடுத்த முனிவரொருவரின் கதை...
சுற்றியுள்ள கிராமத்து மக்களெல்லாம் சங்கடங்கள் நேரிடுகையில் வந்து அந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றுச்செல்வது வழக்கம். அன்றைக்கும் ஒரு குடியானவன் வந்து தன் குறைகளைச்சொல்லி, அறிவுரைபெற்றுச் செல்கையில் முனிவருக்குத் தன் தோட்டத்தில் விளைந்த சுவையான கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனானாம்.
நீராடச்சென்ற முனிவர் தன் பத்தினியிடம், கத்தரிக்காய்களைக் கறிசமைத்துவை நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச்சென்றாராம். கணவர் சொல்தவறாதவளாக, அந்தப் பிஞ்சுக்கத்தரிக்காய்களைப் பசுநெய்யில் தாளித்து, உப்பிட்டு வதக்கினாளாம் முனிவரின் மனைவி. வதக்குகிற வாசனையில் வாயூற, ஒரு துண்டை எடுத்துச் சுவைபார்த்தாளாம். அபாரமான ருசியில் ஆசை அதிகமாக, ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிட இறுதியில் ஒற்றைத்துண்டுமட்டுமே மிஞ்சியதாம்.அதையும் கணவருக்குக் கொடுக்கவா வேண்டாமா என்று அல்லாடியதாம் அவள் மனசு.
அதற்குள் நீராடச்சென்ற முனிவர் வந்து, உணவு பரிமாறு என்று உத்தரவிட்டாராம். வடித்த சாதத்தை ஒற்றைத்துண்டு கத்திரிக்காய் வதக்கலுடன் கொண்டுவந்து வைத்தாளாம் அவள்.
மிச்சக் கறியை எங்கேயென்றாராம் அவர். மொத்தமும் அவ்வளவுதானென்று அஞ்சியஞ்சிச் சொன்னாளாம் அவள்.
பர்த்தாவுக்குக் கொடுக்கக்கூட மனசில்லாதபடிக்கு, உன்னைத் அள்ளித்தின்னவைத்த அந்தக் கத்திரிக்காயில், இன்றுமுதல் புழுக்கள் குடியேறட்டும் என்று சாபமிட்டாராம் முனிவர். அன்றிலிருந்துதான், கத்தரிக்காய்க்குள் புழுக்கள் குடியேறியதாம்.
அன்றைக்குக் குடியேறிய புழுக்களை, இன்றைக்கு வெளியேற்ற, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் மரபணு மாற்றம்பெற்ற கத்தரிக்காய்கள், அதாவது B.T. Brinjal.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis, (B.T) என்ற நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட, நச்சுத்தன்மையுள்ள டி.என்.ஏ வை கத்தரிச்செடிகளில் உட்செலுத்தி, கத்தரிக்காய்களிலுள்ள பூச்சிகளை அழிக்கமுடியுமென்று கண்டறிந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.
செடிகளிலேயே பூச்சிகளைக்கொல்லும் தன்மைவந்துவிடுவதால், விவசாயிகள் கத்தரிச்செடிக்குப் பூச்சிமருந்துகள் அடிக்கவேண்டிய அவசியமில்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உட்கொண்ட எலிகளுக்கு, உடலுறுப்புகளில் பாதிப்பும் உடலியக்கத்தில் பிரச்சனைகளும்கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
எது எப்படியோ, சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், உண்ணுகிற உணவு என்று அத்தனையும் மாசுபட்டுப்போயிருக்கிறதென்று இன்றைக்குநாம் அறிந்துகொண்டிருப்பதுபோல, இந்தக் கத்திரிக்காய்கள் பெரிதாய் என்னசெய்துவிடப்போகின்றன என்பதும் கால ஓட்டத்தில் கட்டாயம் தெரியவரும். அதுவரைக்கும், நாமும் கத்தரிக்காய் வதக்கலைக் கவலையில்லாமல் சாப்பிடுவோம்.
************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக