ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்!

நெருப்பில்லாம புகையாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க...அன்றைக்கு, ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக வெளிப்பட்ட அடர்த்தியான புகை,அதைக் கண்காணித்துக் கத்திய ஃபயர் அலாரம், ரெண்டுமாகச் சேர்ந்து அந்தப் பன்னிரண்டுமாடிக் கட்டிடத்திலிருந்த பலகுடும்பங்களைக் பதற்றமடையச்செய்துவிட்டது.காரணம் ரெண்டு முட்டையும் ரெண்டுபேரின் அவசரமும்.

வேலைக்குப்போகிற அவசரத்தில் தனக்கும் கணவருக்குமாக ரெண்டு முட்டையை வேக வைத்த அந்த பெண்,அலுவலக வாகனம் வந்துவிட்டதால் அவசரத்தில் முட்டையை மறந்துபோய் வீட்டைப்பூட்டிக்கொண்டு போய்விட,தண்ணீர் முழுக்க வற்றிப்போய்
பொறாமைக்காரனின் மனசுபோல,புகையாய்ப் புகைய ஆரம்பித்திருக்கிறது சட்டியிலிருந்த முட்டைகள். அதைக்கண்டு,எறும்பு கடித்த சிறுபிள்ளையாய் வீறிட்டிருக்கிறது அங்கேயிருந்த புகையைக் கண்காணிக்கும் கருவி.

அப்புறம் பூட்டிய வீட்டின் கதவு, வீட்டுக்காரர்களின் அனுமதியுடன் உடைக்கப்பட்டு, புகைக்கான காரணம் புரிந்துகொள்ளப்பட்டு, பதற்றம் தணிக்கப்பட்டது தனிக்கதை.

புகை, தற்போது உலக மக்களுக்கு கிலியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. சுற்றுகிற பூமியைச் சூடாக்கி, துருவப்பகுதிகளில் பனியை உருகவைக்கும் பற்பல வேதிப்பொருட்களின் வெளிப்பாடான இந்தப் புகை இன்று எல்லா நாட்டினருக்கும் எமனாகத்தான் தெரிகிறது.

நல்லதும் கெட்டதுமாக எல்லா இடத்திலும் புகை, மனித வாழ்க்கையில் கலந்துதான் காணப்படுகிறது.பூஜையறையிலிருந்து புறப்படும் தூப,தீபப்புகையிலிருந்து,விரல் நுனியில் புகையும் புகையிலைப் புகையும்,வழியெல்லாம் வெளியாகும் வாகனப்புகையும்,ரசாயனத் தன்மையுள்ள தொழிற்சாலைகளின் புகையுமாக வானவெளியெல்லாம் விஷமாகிப்போய்விட்டது இன்று.

போகிப்பண்டிகையன்று, சென்னை நகரமே புகைமூடிப்போவதாகப் பலவருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் போகியன்று வாகனங்களின் பழைய டயர்களை எரிப்பவர்கள்மேல் வழக்குப்பதிவுசெய்யுமாறு, காவல்துறை இணை ஆணையர் உத்தரவிட,
69 பேர் பிடிபட்டதாக செய்திகள் சொல்லுகிறது.

இதெல்லாம் இப்படியிருக்க, இராமாயண காலத்திலும் ஊர்கள் பல்வேறுவகைப் புகைகளினால் சூழப்பட்டிருந்ததை பாலகாண்டம் நாட்டுப்படலப் பாடலொன்று அழகாகச் சொல்லுகிறது.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,

நகல்இன் ஆலை நறும்புகை, நான்மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,

முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

வீடுகளில் வாசனைக்காக எரிக்கப்படும் அகில் கட்டைகளின் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கரும்புச்சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளும் ஓதப்படும் வேள்விகளில் எழும் ஹோமப்புகையுமாக ஊரைச் சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பிலும் வியாபித்து நின்றதாகக் காட்டுகிறான் கம்பன்.

சாலையில் புகைவிடும் வாகனங்கள் இல்லையென்றாலும் ஆலைகளின் புகை அந்தக்காலம்தொட்டு இருந்துவந்திருக்கிறது.

ஆக, பகையாகிப் பலருக்கும் தொல்லை கொடுக்கின்ற புகை, இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கும்கூட மக்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்தபடி,இடைவிடாமல் புகைந்துகொண்டேதான் இருந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளமுடிகிறது.

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக