செவ்வாய், 23 நவம்பர், 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.


2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம நிறைய கத்துக்கணும்.

**********


ஞாயிறு, 21 நவம்பர், 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில் (அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப் பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :) 

*********


வெள்ளி, 19 நவம்பர், 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின் பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க. 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக் கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப் போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலி தாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அது மட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன். ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப் பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டு முடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்  குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப் பாட்டியின் பேத்தி போலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறு குழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர் துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? 

********


திங்கள், 8 நவம்பர், 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...


கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு? இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்து முடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

***********