திங்கள், 26 மே, 2008

சீரக சாதம் | ஜீரக சாதம் | Jeera Rice

தினமும் அதே சாதம்தானா என்று வீட்டில் சலிப்பாய்க் குரல் எழும்புகிறதா? ஒரு மாறுதலுக்காய் மிகச் சுலபமான ஜீரகசாதம் செய்து அசத்துங்க...

Variety Rice Recipe - Jeera Rice


தேவையான பொருட்கள்

பாஸ்மதி/சோனா மசூரி அரிசி - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 3
முந்திரிப்பருப்பு - 10
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
__________

1. அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும். 

ஜீரகம் வெடித்ததும் அதில் வடிகட்டிய அரிசியைச் சேர்த்து, கூடவே தயிரையும் சேர்த்து, 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அரிசியில் தேவையான அளவு நீரை ஊற்றி, அளவாக உப்புச் சேர்த்துக் கலந்துவிடவும்.

3. குக்கரை மூடி சிறுதீயில் வைத்து 1 அல்லது 2 விசில் விட்டதும் இறக்கிவிடலாம்.

மிக எளிதான இந்த ஜீரக சாதத்தை, எந்தவகை காய்கறி குருமாவுடனோ, அல்லது அசைவ உணவுவகைகளுடனோ சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள வடகமோ, அப்பளமோ இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
                                                            ***

செவ்வாய், 13 மே, 2008

பாலை மலைத்தொடரைப் பார்க்கலாம் வாங்க...



ஆண்டுத்தேர்வு விடுமுறையின்போது, கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் கான்கிரீட் காடுகளிலிருந்து விலகி மலைப்பகுதிக்குச் செல்லலாமென ஓர் எண்ணம்...மலையென்றதும் நம்ம ஊர் குற்றாலம், கொடைக்கானல் மாதிரி எதையாவது கற்பனை செய்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே அதுபோல இயற்கையழகுக்கு ஏங்கும் விழிகளைக் கொஞ்சமேனும் திருப்தி செய்ய பாலையில் மலைப் பிரதேசம் தேடி ஒரு சிறு பயணம்...ஹத்தா(hatta) வை நோக்கிய பயணத்தை காலை 8.30 க்குத் தொடங்கினோம்.எங்களுக்கு முன்பாகவே கதிரவன் பிரகாசமாய்ப் புறப்பட்டிருந்தார்

துபாயிலிருந்து கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர்கள் தொலைவில், ஓமான் நாட்டு எல்லையில் ஹஜர் (hajjar ranges) மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. மக்கள் நெருக்கம் குறைந்த இயற்கை இன்னமும் அதிகம் சிதைக்கப் படாத பகுதி...

வழிநெடுகே விரியும் பாலை மணல்வெளி...மேயும் ஒட்டகங்கள்...



கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரியும் பாலை மணல் மேடுகள்...



பாலைவன மணல் திட்டுகளில் காணப்பட்ட உற்சாகமான பொழுதுபோக்குகள் இதோ...
பாலைவன மணலில் 4 wheel drive வாகனங்களிலும், dune buggy எனும் பைக்கிலும்
ஏறி இறங்கி விளையாடுதல் இங்கு மிகவும் பிரசித்தம்






வழியில் ஆங்காங்கே இறங்கி இளைப்பாறிவிட்டு, ஹத்தாவை அடைகையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தார். முதலில் சென்ற இடம் Hill park. பூக்கள் இல்லாத ஒரு பூங்கா. சிறு குன்றில் அமைக்கப்பட்ட அரேபிய அமைப்பு ஒற்றைக் கோபுரத்துடன் ஓர் இளைப்பாறும் இடம்.



மலைப்பூங்காவின் உச்சியிலுள்ள கோபுரம்...



மலைப்பூங்காவில் உணவருந்தி இளைப்பாறிவிட்டு, ஹத்தா அணைக்கட்டைப் (hatta dam)பார்க்கப் புறப்பட்டோம். ஆறில்லை அருவியில்லை... ஆனால் அணைக்கட்டு உண்டு. சுற்றிலும் மலைத்தொடர்கள். நடுவில் நீர்த்தேக்கம். பலமுறை இந்த இடத்திற்குச் சென்றிருந்தாலும் இந்தமுறைதான் அதிகமான நீருடன் பார்த்திருக்கிறோம். சென்றமுறை, அணைக்கட்டிற்குள் நாங்கள் பந்து விளையாடிய பிரதேசம் இந்தமுறை நீருக்குள்...

இந்த அணைக்கட்டுத்தவிர Wadi என்று சொல்லப்படும் நீரூற்றுக்களும் இங்கு உண்டு. மேடுபள்ளமான மலைப்பாதையைக் கடந்து சென்றபின் கால்களைத் தழுவும் நீரோடைகளையும் காணலாம். வழிதவறிச் சென்றால் வேறெங்காவது சென்று மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
சாலைகளில்லாத காரணத்தால் பயணத்தில் எச்சரிக்கை மிக அவசியம்.

இதோ,அணைக்கட்டிற்கு ஏறிச் செல்லும் பாதை...



அணைக்கட்டின் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...





நீர்த்தேக்கத்தின் பச்சைவண்ண நீரில் பொன்னிற மீன்கள்...
பொரியெல்லாம் கிடைக்காததால் பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிட்ட அழகு...






குளிரக்குளிர நீரில் விளையாடிவிட்டு அணைக்கட்டைவிட்டு வெளியேறினோம்.
அணியிலிருந்து இறங்குகையில்...



அணைக்கட்டைவிட்டுப் புறப்பட்டு, செயற்கை கலக்காத இயற்கையின் இன்னும் சில பக்கங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

வழியிலுள்ள மலைத்தொடர்கள்...






வழியெங்கும் காணப்பட்ட இயற்கையை ரசித்தபடியே மீண்டும் வரும்நாளை எதிபார்த்தபடி வீட்டை நோக்கி விரைந்தது எங்கள் வாகனம்.

கோடை விடுமுறையில் குளிர்ச்சியான நினைவுகள்





போனவருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது,விமானம் ஏறுவதற்கு முன்பே பதினைந்து நாளுக்கான பயணத்திட்டம் போட்டாகிவிட்டது. மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார், என் பெற்றோர் என்று ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் ஒதுக்கிய நாட்கள் போக, மிச்சநாட்களை மலைக்கோட்டை விநாயகர், உறையூர் வெக்காளியம்மன், பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் முருகன் என்று கடவுள்களுக்கு ஒதுக்கிவிட எல்லா நாளும் பரபரப்பான பயணங்களாகவே இருந்தது.

பழனி முருகனுக்கு ஒதுக்கப்பட்ட நாளுக்கு முன்தினம் பலவீட்டுச் சாப்பாடும் பலஊர்த் தண்ணீரும் சேராமல் மூத்தமகள் படுத்துக்கொள்ள, "பழனியாண்டவரை இங்கிருந்தே நினைச்சுக்கோ... அடுத்தவருஷம் வரும்போது கட்டாயம் போயிடலாம்" என்று அம்மா சொல்ல பழனித்திட்டம் கேன்சலானது.

பகல் பத்துமணியிருக்கும்... வாடகைக்கு எடுத்த வண்டி சும்மாதானே நிக்கிது, நாம பக்கத்து கிராமத்தில எங்க பெரியம்மா வீட்டுக்குப் போய்வரலாமே என்று என் கணவர் சொல்ல, மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானோம். "நல்லவேளை எனக்கு உடம்பு முடியல... நீங்க போற ஊருக்கு ரோடே கிடையாதுடா" என்று என் மகள் தன் தம்பியை வெறுப்பேத்த, அவனும், "அம்மா, நான் சுட்டி டிவி பாத்திட்டு இருக்கிறேன் நீங்க போயிட்டுவாங்க" என்று ஆரம்பிக்க, அவனை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.

வண்டியிலேறியதும்தான் உரைத்தது, ஒரு ஃபோன் கூடப் பண்ணாமல் புறப்படுகிறோமே என்று...ஃபோன் பண்ணுவதற்கு அவர்கள் நம்பர் தெரியாது அதுவேறு விஷயம்...
என் கணவர், அதெல்லாம் நகரத்துப் பழக்கம் இங்கே அதெல்லாம் தேவையில்லை என்று சமாதானம் சொல்ல அரைமனசுடன் புறப்பட்டோம்.

முக்கிய சாலையைத் தாண்டி, மண்சாலையில் நுழைந்தது வாகனம். இருபுறமும் வயல்கள், எதிர்ப்பட்ட ஒரே ஒரு மினி பஸ், பாதையைக் கடந்து செல்லும் பசு மாடுகள், பறவைகள் தவிர ஆள் நடமாட்டமே இல்லை. இயற்கையை ரசித்துக்கொண்டே ஒருவழியாக ஊருக்குள் நுழைந்து வீட்டிற்குப்போனால் வீட்டில் யாருமில்லை. வாசலில் கோழிகள் மேய்ந்துகொண்டிருக்க, திண்ணையில் ஆடுகள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. "பாட்டி வயலுக்குப் போயிருக்காங்க, இப்ப வந்துருவாங்க..." என்று பக்கத்துவீட்டுச் சின்னப்பெண் தகவல் கொடுத்துவிட்டு, கையோடு போய் கூட்டிக்கொண்டும் வந்துவிட்டாள்.

எங்களைப் பார்த்ததுதான் தாமதம் அத்தைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "ஐயா, என்னைப் பாக்கவா இவ்வளவு தூரம் வேகாத வெயில்ல வந்தீக" என்று சொல்லிச்சொல்லி மாய்ந்துபோய், நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு உட்காரச் சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டுப் பையனைக்கூப்பிட்டு பதநீரும் நுங்கும் வாங்கிவரச் சொன்னார்கள்.பதப்படுத்திய பாலையும், பலமாசம் ஷெல்பிலிருந்த ஜூஸையும் குடித்து மரத்துப்போயிருந்த ருசி நரம்புகள் விழித்துக்கொள்ள, நுங்கு கலந்த பதநீர் தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. அதற்குள் பாட்டியோட கொழுந்தனார் மகன் வெளிநாட்டிலேருந்து குடும்பத்தோடு வந்திருக்காங்க
என்ற செய்தி தெரிந்து, பத்துப்பதினைந்துபேர் வந்து எங்களை வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டு, ஏதாவது உதவி செய்யணுமா என்று அத்தையிடம் கேட்டுவிட்டுப் போனார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வறுத்தமீனும், பொரித்த முட்டையுமாக ஒரு விருந்தே சமைத்து அத்தை அசத்திவிட, என் கணவர் என்னிடம் மெதுவாகக் கிசுகிசுத்தார்..."பார்த்தியா,போன் பண்ணாம போறோமேன்னு வருத்தப்பட்டியே, போன் பண்ணிட்டுப் போனாலே பிஸ்கட்டையும் காப்பியையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டே நாங்க ரொம்ப பிசி என்று காட்டிக்கொள்(ல்லு)ளும் மனுஷங்க ஊர்ல வாழ்ந்து பழகிட்ட உனக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமா இருக்குமே" என்று சிரிக்க, செயற்கையின் சாயம் கொஞ்சமும் கலக்காத அந்த பாசம் என்னை "ஆமா" என்று தலையசைக்க வைத்தது.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது, திண்ணையில் எங்களுக்காக ஒரு குட்டிச் சாக்குப்பை தயாராக இருந்தது. "என்ன பெரியம்மா?" என்று என் கணவர் கேட்க,ஒண்ணுமில்லைய்யா, நம்ம வயல்ல விளைஞ்ச கடலை, மரத்துல பறிச்ச ரெண்டுமூணு எழனி, கொஞ்சம் கொய்யாப்பழம் அவ்வளவுதான்...வீட்டிலபோயி என் பெரிய பேத்திக்கு ரெண்டு எழனிய வெட்டிக்குடு, சூடு தணிஞ்சி உடம்பு சரியாப்போயிடும் என்று சொல்ல, நெகிழ்ந்து போனவளாய் பையை எடுத்து வண்டியில் வைத்தேன். பை கனமாக இருந்தது. ஆனால், மனசு அந்த உபசரிப்பின் மகிழ்ச்சியில் லேசாகி மிதந்தது.

*******

திங்கள், 5 மே, 2008

மழை மேகத்தின் முதல்துளி...






மேகங்களெல்லாம் மழையாகப் பொழிகிறதா என்ன...
சுழற்றிவீசும் சூறைக்காற்றில் கலைந்துபோகும் மேகங்கள் கணக்கிலடங்காதவை. கடலில் நீர்குடித்து மலையில் மழையாய்ப் பெய்து, சரிவில் அருவியாய் இறங்கி, சமவெளியில் ஆறாய்ப் பெருகிடும் மேகத்திற்குத்தான் எத்தனை வடிவங்கள்?

சின்ன வயதில் கால்களை மணலில் அளையவிட்டு, விழிகளால் வானத்தை அளந்த காலத்தில், சிங்கமாய் சிறுநரியாய்,ஒட்டகமாய் ஓடும் குதிரையாய், அம்மா பொரித்த கோணல் அப்பளமாய், அப்பா வாங்கிக்கொடுத்த பஞ்சுமிட்டாயாய் எத்தனை வேஷமிட்டு நம் கற்பனையோடு கதைபேசியிருக்கும்?

ஒளிகொடுக்கும் சூரியனுக்கு வழிகொடுக்காத நந்திபோல உருவம் மறைத்திடும் இந்த நீர்க்குவியல்தான் எத்தனை அழகு? மேகங்கள் இல்லாத வானத்தில் வலம்வரும் நிலவுகூட அழகில்லைதான்...சின்னதும் பெரியதுமாய் எண்ண இயலா மேகப்பொதிகள் சூரியனின் யானைப்படைகளாகவும், குதிரைக்கூட்டமாகவும் அணிவகுத்துச்செல்லும் அழகுக்கு ஈடென்ன சொல்ல இயலும்?

வானில் பறக்கையில் நம்மோடு கைகுலுக்கி, பூமிக்கும் வானுக்குமிடையில் போர்வையாய் விரிந்திருக்கும் மேகத்திரை மறைவில் நாம் தொலைந்துதான் போகிறோம். மேகத்தைப் பாடாத கவிஞன் கண்ணில்லாதவனென்றே சொல்லிவிடலாம்.

உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே...

என்றும்,

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

என்றும் இளையநிலாவைப் பொழியவிட்டு நம் இதயங்களில் நிறைந்த பாடலை யாரும் மறக்கவேமுடியாது.

மாயனாம் கண்ணனைக் குறிப்பிடுகையில் கார்மேக வண்ணனென்று கனிவோடு அழைப்பதும், சிலம்பின் நாடுகாண் காதையில்,

"மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"

வேங்கடவனின் திருத்தோற்றம் கூறுகையில்,மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லினைப் பூண்டு, நல்ல நிறமுடைய மேகம் நிற்பதுபோல, சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்று சிறப்பித்துக் கூறுவதும் வான்மேகத்துக்குக் கிடைத்த விருதுகள் எனலாம்.

அழகான மேகங்கள் சில சமயங்களில் அமிலமேகமாக மாறி,காடுகள் கழனிகளை அழித்துச் சிதைப்பதுமுண்டு.வாகனங்கள் வெளியிடும் புகையின் மாசுகளும், தொழிற்சாலைப் புகைக்கழிவுகளும் அமிலமழைக்கு முக்கியக் காரணங்களாகும்.

மேகமின்றி மழையில்லை, மழையின்றிப் பயிரில்லை, பயிரின்றி உயிரில்லை...இப்படி எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான அழகு மேகங்கள் இந்த பூமிப்பந்தினுக்கு இன்னும் பொலிவூட்டட்டும்!

**********