செவ்வாய், 11 மே, 2010

நான் அம்முவின் அம்மா



அம்மாவாயிருக்குறது ஒண்ணும் சுலபமில்லீங்க...அதுக மூணையும் நா விட்டுட்டு வந்தப்ப, பெரியவனுக்குப் பத்து வயசிருக்கும். ஆறு வயசிலயும் ரெண்டு வயசிலயுமா அடுத்த ரெண்டும் பொண்ணுக. சின்னது அம்மு, என்ன விட்டு எப்பிடி இருக்கப்போகுதோன்னுதான் தவிச்சுப்போனேன். ஆனா, ஏதோ அடியும் மிதியும்பட்டு அதுவா வளந்திருச்சு.

அவுகப்பாவும் புள்ளைங்க மேல பாசமில்லாதவுக கிடையாது. நல்லாத்தான் பாசமாயிருப்பாக. ஆனா, நா விட்டுட்டு வந்தப்புறம்தான் முழுசா மாறி்ப்போயிருக்காக. எனக்குப் பிறகு என் தங்கச்சியக் கல்யாணம் கெட்டிக்கிட்டவுக, அவளுக்கு ரெண்டு புள்ளைங்க பிறந்ததும், என்னோட புள்ளைகளுக்கு மாற்றாந்தகப்பன் மாதிரி மாறிப்போனதுதான் வினையாகிப்போச்சு.

நா இருந்தப்ப, புள்ளைகளோட விளையாட்டு சைக்கிள்கள நிறுத்த நாங்க கட்டுன முடுக்கு அறைதான், இப்ப என்னோட மூணு புள்ளைகளுக்கும் இருப்பிடமாயிருச்சுன்னு சொன்னாக. மனசு தாங்கல. மத்த ரெண்டும் பரவாயில்ல, சித்திக்காரி சொல்லக்கேட்டு, அவளுக்குப் பணிவிடைசெய்து பொழைக்கப் பழகிடுச்சுங்க. கடைக்குட்டி மட்டும்தான் சித்திகாரிகிட்டயும், அப்பா கிட்டயும் அடி வாங்கிச் சாகுதுன்னு தெரிஞ்சதும் அடக்கமுடியல எனக்கு.

அன்னிக்கிப் பாருங்க, தென்னை மரத்தில கட்டிவச்சு சாத்துசாத்துன்னு சாத்தியிருக்காக. சின்னப்புள்ள, அரிசி மூட்டையில ஏறி வெளயாடுனப்போ, கடைக்கு வாங்கின எண்ணெய்க்குள்ள அரிசியக் கொட்டிவிட்டிருச்சாம். ராத்திரிபூரா வீட்டுக்குள்ள கூப்பிடாம, வெறும் வயிறா வெளியவே கட்டிவச்சிருக்காக. பாக்கப்பாக்கத் தாங்கல எனக்கு.

சின்னதுல, அம்மு அம்முன்னு எப்பவும் எங்கிட்டயே வச்சிருப்பேன். அதுவும் அம்மா அம்மான்னு சுத்திவரும். அதோட நிலமையப் பாத்தீகளா? இப்பல்லாம் வீட்ல வேல பாக்கிறதுக்காக அதுங்கள ஸ்கூலுக்குக்கூட அனுப்புறதில்ல. என்னோட ஆசைமகன் இப்ப அவுகளோட கடைக்கு சம்பளமில்லாத வேலக்காரன். நா மட்டும் இருந்திருந்தா, அதுக்கு அவன் இப்ப சின்னமுதலாளி.

கடக்குட்டி அம்முவுக்கும் வயசு பதினாறாயிருச்சு. அப்பப்போ பின்னாடி வீட்டுக்குப் அவ போறது தெரியுது. அங்க வாடகைக்கு இருக்கிறவுக ரொம்ப நல்லமாதிரின்னு தோணுது. அம்முவோட கஷ்டத்தைப் பாத்துட்டு அவளுக்கு அனுசரணையா இருக்காக போல. அவுகளும் ஒருநாள் வீட்டைக் காலிபண்ண, அம்முவும் அன்னிக்கே வீட்டைவிட்டுப் போயிட்டா போல. ஒண்ணு தொலஞ்சிதுன்னு கண்டுங்காணாம இருந்துட்டாக அம்முவோட அப்பாவும் அவரைக் கட்டிக்கிட்ட எந்தங்கச்சியும்.

அனுசரணையா இருந்த அந்த பின் வீட்டுக்காரவுக, அம்முவைக் கொஞ்ச நாள் கழிச்சு அவுங்க மகனுக்கே  கட்டிவச்சிட்டாகளாம். அம்மு அதுக்கப்புறம் கொஞ்சநாள் சந்தோஷமாத்தான் இருந்திருக்கா. ரெண்டு புள்ளைக அவளுக்கு. அவ கட்டிக்கிட்ட அந்த கிறிஸ்தவப் பையனுக்கும் ஆயுசு கெட்டியில்லாம இருந்திருக்கு. நாலே வருஷத்துல அம்முவையும் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு செத்துப்போயிட்டான்.

அம்மு அதுக்கப்புறம், ஒரு பாதிரியார் வீட்டுல வீட்டுவேல செஞ்சுகிட்டே, அவங்க நடத்துற பள்ளிக்கூடத்துல புள்ளைகளைப் படிக்கவச்சிருக்கா. அம்முவ மாதிரி இல்லாம அவுக ரெண்டுபேருக்கும் நல்ல படிப்பு அமைஞ்சிருச்சு. ரெண்டு பிள்ளைகளும் நல்லாப் படிச்சிருச்சுக.
அம்மாவ நல்லபடியாப் பாத்துக்கணும்னு ஒரு உத்வேகம் அதுங்களுக்கு. படிப்பு முடிஞ்சதும் அந்தப் பாதிரியார் நல்ல பையன் ஒருத்தனுக்கு அம்முவோட மகளைக் கட்டிவச்சாரு. அம்முவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

அன்னிக்கி, மகளும் மருமகனும் விருந்துக்கு வாராங்கன்னு அம்முவுக்கு ஒரே பரபரப்பு. சாமான் லிஸ்ட மகன்கிட்ட கொடுத்து வாங்கியாரச் சொல்லிட்டு, பம்பு ஸ்டவ்வப் பத்தவைச்சா. அடுப்பு வேகமா எரியட்டும்னு காத்து அடிச்சுக்கிட்டிருந்தா. மக வரப்போற சந்தோஷத்துல நிறையவே வேகமா எரியவிட்டா.

'டம்'முன்னு பெருஞ்சத்தம். சேலையில பிடிச்சு கொஞ்சங்கொஞ்சமா அம்முவ விழுங்கிச்சு நெருப்பு. கடைக்குப்போன மகன் வந்து பாக்கிறான். கரிக்கட்டையா கிடக்கா அம்மு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறாக. கூடவே நானும்போறேன். போதும், இத்தன கஷ்டப்பட்டது போதும். அம்மாகிட்ட வந்திரு அம்மு. அனத்திக்கிட்டே இருக்கேன் நான்.

டாக்டர் வந்து பாத்துட்டு கைய விரிச்சிட்டார். அம்முவோட மகன், அம்மாவப் பாக்க முடியாம வெளிய நின்னு அழுதுகிட்டிருக்கான். மகனைப் பாக்கணும்னு சைகை காட்டுனா அம்மு. அவன் கிட்ட வந்து பார்த்ததுதான் தாமதம். பட்டுன்னு நின்னுருச்சு மூச்சு. விருந்துக்கு வரதா சொன்ன மகளும் மருமகனும் அழுதுகிட்டே ஓடியாராங்க.

ரெண்டு கைகளையும் விரிச்சுகிட்டு, வா அம்மு, வா... அம்மாகிட்ட வந்துட்ட, இனி உன்ன நான் பாத்துக்கிறேன்னு வாரி அணைக்கிறேன். ஆனா, "ஐயோ, உன்ன மாதிரியே நானும் என் மக்கள தவிக்கவிட்டுட்டு வந்துட்டனே" ன்னு அப்ப நான் அழுதமாதிரியே 'ஓ'ன்னு அழுதுகிட்டிருக்கா அம்மு.

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக