வியாழன், 10 செப்டம்பர், 2015

மூதுரைக் கதைகள் - 2 புலி கிடந்த புதர்



மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சுதான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிற மாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகு வச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. 

நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக, இறுதியில், போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த வளையலை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில், உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. 

அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில், இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால், அந்த வீடு புலி பதுங்கிக் கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


                                                    **************











சனி, 5 செப்டம்பர், 2015

பாரதியின் கண்ணன்


அவன் என்றைக்கு வந்தான், எப்போது என்னில் கலந்தான், எந்தத் தருணத்தில் என்னைத் தன்னுடையதாக்கினான் எதுவும் புரியவில்லை...ஆனால், அவன் இதயப் பரப்பெல்லாம் வியாபித்து விளையாடுகின்றான். என்ன நினைத்தாலும் கண்ணில் தெரிகிறான்...என் வழிகளில் கரம்பிடித்து வழிப்படுத்திச் சிரிக்கிறான்.


இவனை என்னென்று விளிப்பேன்? யாரென்று நினைப்பேன்? எதுவும் புரியாமல் தவிக்கிற மனசு அவனை எல்லாமாகப் பார்த்து மகிழ்கிறது. இப்படித்தான் வியந்திருக்கிறான் பாரதி.

கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய்,
மாணவனாய், சற்குருவாய், சின்னக்குழந்தையாய், காதலனாய்,
காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய்க் கண்டு வியக்கிறான் அவன். காதலியாகிற கண்ணன் கண்ணம்மாவாகியிருக்கிறான் அவன் கவிதைகளில்.


எத்தனை காதல் அவனுக்குக் கண்னனிடத்தில்! சொல்லத்தெரியாத பிள்ளையெனத் தவிக்கிற அவன் மனது, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று உருகிப்போகிறது. அனைத்தும் அவனென்ற அன்பினில் கட்டுண்டு அகமகிழ்ந்து நிற்கிறது.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான் - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

அவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான். 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதைநாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.

காதல்மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான்கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுஅவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான்.


அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.


காதல், மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான், கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுமனசு.

எண்ணும்  பொழுதிலெல்லாம் -அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் - அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!

பலவிதமான பிரச்சனைகளின் மத்தியிலும், பற்றுக்கோடாய் ஒரு நம்பிக்கையிருந்தால், மனிதனின் மனது அந்தத் தளைகளில் கட்டுப்படாமல் உயர உயர உற்சாகமாய்ப் பறக்கும். கற்பனைச் சிறகுகொண்டு காற்றிலே மிதக்கும். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் என்கிற உறுதி வரும். பற்றுக்கோடாய்ப் பராசக்தியும்கரம் பற்றி வழிநடத்தக் கண்ணனும் பாரதிக்குக் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் அடிமைத்தளையிலும் ஆனந்த சுதந்திரத்தைக் கண்ணில் கண்டான். 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே"

என்று சிங்கநாதம் எழுப்புகிறான். சோர்ந்து கிடந்த அடிமை மனங்களுக்கு உற்சாகமூட்டுகிறான். மேலும்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்".

என்று தன் கற்பனைச் சிறகுவீசிக் கனவு காண்கிறான். இது ஒரு கவிஞனுக்கே உரித்தான உணர்வு. அவனால் மட்டுமே அப்போதைய நினைவுகளிலிருந்து அப்பால் விலகி, ஒரு அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கமுடியும். அவனும் சஞ்சரித்தான். அழகான ஒரு உலகம் அவன் கண்ணில் விரிந்தது. அடிமைத் தளைகள் நீங்கிய ஒரு ஆனந்த உலகம். கண்ணனின் கரங்களைப் பற்றியபடி கனவுகளோடு மரித்துப் புத்துலகம் போனான் அந்தக் கவிஞன். தன்னை  மகாகவியாய் மக்கள் மனதில் நிறுத்திப்போனான். கண்ணனின் காதல், அவன் வரிகளில் காலங்காலமாய் நிலைத்திருக்கும். காதல் மனங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.