சனி, 26 ஜூன், 2010

மடித்துச் சுருட்டிய மஞ்சள் பை!

 


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டத்துக்குக் குறைவிருக்காது. பஸ்சில் ஒருதடவை பர்சோடு பணத்தைப் பறிகொடுத்ததிலிருந்து, வெளியே வந்தா எப்பவும் கொஞ்சம் 'அலர்ட்டா' இருக்கிறது வழக்கம். அதுவும் பிள்ளைகளோடு போனா ரொம்பவே எச்சரிக்கையாயிருக்கிறதுண்டு.

மகளுக்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, பஸ்ஸுக்கு வந்து நின்னப்போ, பக்கத்தில் என் அப்பா வயசுப் பெரியவர் ஒருத்தரும் வந்து நின்னார். திரும்புகையில் ஸ்நேகமாய்ச் சிரித்தார், பதிலுக்கு நானும் சிரித்தேன். என் மகனிடம் பேச ஆரம்பித்தார். அதற்குள், கலைந்த தலையும், லுங்கியுமாக ஒரு ஆள், அவரிடம், "ஐயா, காலுக்கடியில, காசைத் தவறவிட்டிருக்கீங்க பாருங்க..." என்றான். ஒரு பத்து ரூபாயும் ரெண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளும் அவர் அருகில் கீழே கிடந்தது.

அவர் குனியுமுன்னால் என் மகன் குனிந்து எடுத்து, இந்தாங்க தாத்தா என்று அவரிடம் கொடுத்தான். அவர், என்னோடதா என்று திகைத்தாலும், சட்டைப் பையில் வாங்கி வச்சுக்கிட்டார். ஆனாலும், முகத்தில் சந்தேக ரேகை ஓடியது. அடுத்த ஐந்து நிமிஷத்தில், நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு சின்னப்பையன் வந்து, அவர் சட்டையின் பின்னால் தெரியாதது மாதிரி, கையிலிருந்த ஐஸ்கிரீமைக் கொட்டிவிட்டான்.

அவன், அம்மா மாதிரி இருந்த பெண்மணி ஒருத்தி வந்து, "பெரியவரே, பையன் தெரியாம உங்க சட்டையில, ஐஸ்கிரீமைத் தடவிட்டான். பக்கத்துக் கடையில தண்ணி வாங்கித் தாறேன். நீங்க கழுவிக்குங்க..." என்றாள். அவர், கையிலிருந்த மஞ்சள் பையைக் கீழே வைக்காமல், கையில் கோர்த்துக்கொண்டே சட்டையை லேசாக சுத்தம் செய்துவிட்டு வந்து, மறுபடியும் எங்க பக்கத்தில் நின்றார். நான் அந்தப் பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தேன்.

முதலில் கீழே காசு கிடக்குதுன்னு சொன்னவன், ஐஸ்கிரீம் கொட்டிய சிறுவன், அவன் அம்மா, கையில் பிளாஸ்டிக் கோணிப்பையுடன் ஒருவன் என்று ஒரு நாலைந்து பேர் அந்தப் பெரியவரையே கவனித்தபடி, அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து வந்துவிட, நாங்கள் முன்னாலும் அந்த ஆட்களில் ரெண்டுபேர் பின்னாலும் ஏறிக்கொண்டார்கள். பஸ்சில் ஏறியதும் நான் அந்தப் பெரியவரிடம் சொன்னேன், ஐயா கீழே கிடந்த பணம், மேலே கொட்டிய ஐஸ்கிரீம் எல்லாமே வேண்டுமென்றே அவங்க செய்தமாதிரி இருந்தது என்று.

அதற்கு அவர், நானும் நினைச்சேம்மா, நான் பையில ஒரேயொரு அஞ்சு ரூபாதான் வச்சிருந்தேன் பஸ்சுக்கு. இப்ப மாசத் தொடக்கம் இல்லியா, வயசானவன், பென்ஷன் பணத்தை வாங்கி, மஞ்சப் பையில சுத்தி வச்சிட்டுப்போறேன்னு நினைச்சிருப்பாங்க. ஆனா, நான் என் நண்பர் வீட்டுக்குப்போன இடத்தில அவங்க, வீட்ல காய்ச்ச ரெண்டு வாழைக்காய் கொடுத்தாங்க. அதைத்தான் பையில சுருட்டி வச்சிருந்தேன். அப்படியே பையைத் திருடியிருந்தாலும் அவங்க அநியாயத்துக்கு ஏமாந்துதான் போயிருப்பாங்க என்று சொல்லிவிட்டு, வாழைக்காயை வெளியில் எடுத்துக்காட்டிச் சிரித்தார்.

ஆக, எங்கிட்ட திருடணும்னு நினைச்சு எனக்கு இருபது ரூபாய் குடுத்துட்டுப்போயிருக்காங்க...
பஸ்ஸை விட்டு இறங்கினதும், போற வழியில பிள்ளையார் கோயில் உண்டியல்ல போட்டுட்டுப் போகணும் என்றபடி அந்தப் பெரியவர் இறங்கிப்போனார். பின்னால் ஏறிய அந்த ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பிப்பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. அவர்கள் கைவரிசையைக் காட்ட அடுத்த ஒருத்தர் அகப்பட்டிருப்பாரோ என்னவோ...

                                                     **************