ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

சோறுதான் சொர்க்கம் - அந்தக்காலத்து மனிதர்கள்

 


என்ன பாட்டையா, இந்த வயசிலயும் இவ்வளவு தூரம் நடக்கணுமா? உங்க பேரனை அனுப்யிருந்தா அரைச்சுக் குடுத்தனுப்பியிருப்பேனே என்ற அரவை மில் மாரிமுத்துவிடம், "அடப்போடா இவனே, இது மூணுவேளையும் சோறு தின்ன ஒடம்பு...எத்தன வயசானாலும் அப்புடியே இருக்கும் என்று முட்டியை மடக்கிக் காட்டிவிட்டு மிளகாய்ப்பொடி அரைத்த பையை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் வேம்புத்தாத்தா.

தாத்தாவுக்கு எழுபத்தெட்டு வயசு. கண் பார்வையிலோ, காது கேட்பதிலோ எந்தக் குறையும் கிடையாது. வாழைத் தோட்டத்திலும் வயல்காட்டிலும் இந்த வயசிலும் மண்வெட்டியும் கையுமாய் வேலைசெய்வார். ஆனா, மணிக் கணக்குக்குக் கட்டாயம் சோறு போடணும் அவருக்கு. இல்லேன்னா, எல்லாருக்கும் அன்னிக்குப் பாட்டுதான்.

பாட்டியிருந்தவரைக்கும் எப்பவும் வீட்டில் சிவப்பரிசிச் சோறுதான். காலையில் பழையதும் மோரும் பச்சைமிளகாயும், மதியத்துக்கு வெள்ளி செவ்வாய் தவிர மத்த நாளெல்லாம் மீன்குழம்பும் சுடுசோறும். ராத்திரிக்குப் பால்சோறும் பக்கடாவும். பண்டிகை வந்தாதான் இட்டிலி தோசை. இதுதான் பாட்டி இருந்தவரைக்கும் தினப்படி சமையல்.

மருமக வந்தபிறகு சிவப்புச்சோறு வெள்ளைச்சோறானாலும், வெஞ்சனமெல்லாம் விருப்பப்படி வேணும் அவருக்கு. இப்போதிருக்கிற சப்பாத்தி பூரியோ, உப்புமா கிப்புமாவோ அவருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது.

 இந்த ஒத்த மனுசனுக்காகவாவது எப்படியும் சோறு வைக்கவேண்டியிருக்குதென்று வாய்விட்டுச் சிலநாள் புலம்புவாள் வாசுகி அண்ணி. ஆனாலும், முடிஞ்சா நீ வையி, இல்லேன்னா அதையும் நானே வச்சிக்கிறேன் என்று அவளுக்கு உரக்கப் பதில்சொல்லிவிட்டு உடைமரத்து முள்ளை ஒடித்துவிட ஆரம்பித்துவிடுவார் பாட்டையா. அவருக்குப் பின்னாலிருந்து தானும் மெள்ளமாகச் சொல்லுவாள் அண்ணி, "இவர் கிட்டேருந்து யார வேணுன்னாலும் பிரிச்சிரலாம்...சோறப் பிரிக்கமுடியாது என்று.